
நவீன நாடகத்துறையில் உலகம் முழுக்க தமிழின் பெருமைகளைக் கொண்டு சேர்க்கின்ற பணியை கோவில்பட்டியைச் சேர்ந்த முனைவர் முருகபூபதியின் மணல்மகுடி நாடக நிலம் (1992 முதல்) செய்து வருகிறது.
திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் மீளுரு என்னும் தலைப்பில் நாடகம் நிகழ்த்துவதற்கான ஆயுத்தப் பணிகளில் இருந்த நாடக இயக்குநர் முனைவர் முருகபூபதியைச் சந்தித்து உரையாடினோம். அவருடனான நமது கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்…
நாடகத் துறையிலேயே முழுவதுமாக ஈடுபட்டு வருகிறீர்களே?
நாடகச் செயல்பாடு எனது குடும்பத்தின் மரபுவழிப் பயணமாக அமைந்தது. என் அம்மாவின் அப்பா மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அவலங்களை நாடகம் வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
இதனால் அவருடைய நாடகங்கள் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. எழுத்தாளர்களால் நிறைந்தது என் வீடு. எழுத்தாளர்கள் கோணங்கி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் எனது உடன் பிறந்தார்களே. நான் நாடகத் துறையில் எம்.ஏ, எம்.ஃபில், பி.எச்டி பயின்று இத்துறைக்குள் நிலைகொண்டேன். தொடர்கிறேன்.
நாடகக் கலைஞர்களின் பொருளாதாரம் எவ்வாறு உள்ளது?
உண்மையைச் சொன்னால், இன்று தமிழ் நாடக நிகழ்த்துக் கலைஞர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய வீழ்ச்சியே உள்ளது. ஆனால், நாடகக்கலையில் உள்ளவர்களுக்கு மெல்லக் கலையே Selfish என்னும் சுயத்தை அழித்துவிடுகிறது. ஒருவன் நாடகக் கலைக்குள் இறங்கிவிட்டால் அவனால் அதிலிருந்து வெளிவர முடியாது. அழைத்துக் கொண்டே இருக்கும் பாசிட்டிவான மோகினி அது.
ஒரே நேரத்தில் ஆயிரம் பேரைத் தன் நடிப்பால் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்பவர்கள் நாடகக் கலைஞர்கள். அபூர்வமான அனுபவத்தைப் பார்வையாளர்கள் நடிப்பின் மூலம் அனுபவிக்கிறார்கள். வலிகள் நாடகங்களில் தூசாகிறது.
மனித உணர்வுகளுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய சக்தி நாடகக் கலைக்கு உண்டு என்பதை நம்புகிறோம். அதை நோக்கிச் செல்கையில் கஷ்டம் என்பது பெரிதாகத் தெரிவதில்லை.

சினிமாவிற்கு ஏன் செல்லவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அது வேறு Forum, இது வேறு Forum… நாடகக் கலையின் வரலாறு குகைக்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. நாடகக் கலையை நம்பியே நாங்கள் வேலை செய்கிறோம்.
சினிமாவுக்குக் கிடைக்கின்ற விருதுகள் நாடகத்திற்குக் கிடைப்பதில்லை. அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் நாடக ஆசிரியர் ஒருவரை நியமிக்கும் போது கலைகளின் வளமையும் கலைஞர்களின் உண்மை நிலையும் புரியும்.
நாடகக் கலையானது வளர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?
கல்வி வளாகங்கள்தான் அதை வளர்க்க வேண்டும். இன்றையத் தலைமுறையினருக்கு இதை வலியுறுத்த வேண்டும். அரசாங்கத்திற்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. கல்வியில் நாடகத்தைப் பிரதானப்படுத்த வேண்டும். பெண்களுக்கு நடக்கின்ற பிரச்னைகளை நாடகம் பேச வேண்டும்.
நான் ‘உடல் திறக்கும் நாடக நிலம்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். பெண் குழந்தைகளை எப்போதும் அடக்கியே வைத்திருக்கிறோம். அவனோடு பேசாதே, அவனோடு போகாதே என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் நாடகத்தில் நடிக்கையில் அத்தனைச் சுதந்திரத்தை உணர்கிறார்கள். அது கலையின் வலிமை. மற்றவற்றால் சாத்தியமில்லாத ஒன்று. நாடகத் துறை வளரும்போது சமூக மாற்றங்கள் வேகமெடுக்கும்.
எத்தனை நாடகங்களை… எங்கெல்லாம் திரையிடுகிறீர்கள்?
கல்லூரியின் அழைப்பின்பேரில் இங்கு வந்து எங்கள் நாடகத்தைத் திரையிடுகிறோம். படித்தவர்களிடம்தான் கருத்தை முதலில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியா மட்டுமன்றி உலக அரங்குகளுக்கும் எங்கள் திரையிடல்கள் நடைபெறுகின்றன.

நாடகத் துறையில் உங்களுக்கு மனதிருப்தி எப்போது உண்டாகும்?
வயதைத் தாண்டி அனைத்துப் பெண்களையும் நாடகத் துறையில் ஒப்படைக்க வேண்டும். அரவாணிகள் சுதந்திரமாக இருப்பது கூத்துவழிதான். பெண்களுக்கான முழு சுதந்திரம் நாடகக் கலையில் உண்டு. 70 பெண்களை வைத்து ‘பாலாமணி’ நடித்த அந்தக் காலமே கலைத்துறையில் மிகவும் முக்கியமான காலம்.
பெண்களிடம் சத்தியம் உண்டு. அவர்கள் கையில் நாடகக் கலை இருக்கிறது. ஒருவருக்கு என்ன தேவை என்பதைச் சொல்லும் மொத்த வாக்கும், சத்தியமும் அவர்களுக்கு உண்டு. பெண்களை நாடகத் துறையில் முழுவீச்சில் ஈடுபடுத்திய பின் ஓரளவு மனநிறைவை அடையலாம்.
அடுத்த இலக்கு?
அடுத்த நாடகம்!
அடுத்த நாடகம் எங்களைப் போன்ற நாடகக் கலைஞர்களைப் பற்றியது. அடுத்த நாடகம்… அதற்கடுத்த நாடகம் என்று சென்று கொண்டே இருக்கும் என் பயணம்.

உங்கள் நாடகங்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த நாடகம்?
செம்மூதாய், சூரணங்கு. அணங்கு என்ற சொல்லுக்கு சங்க இலக்கியத்தில் தெய்வத்தன்மையும் பேய்த்தன்மையும் என்பது பொருள். பெண் பேயாகவும் நிற்பாள். தேவதையாகவும் நிற்பாள். இந்த இரண்டுமே பெண்ணுக்குள் உண்டு. சூரணங்கு நாடகத்தில் முழுவதும் பெண்ணாக நடித்தது நான்தான்.
பெண்கள் நாடகத்துறையில் குறைவாக உள்ளார்களா?
ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. ஆனால் தற்போதைய நிகழ்வுகளைப் பார்க்கையில் அவர்கள்தான் நாளை வருவார்கள் என்று தோன்றுகிறது. காலங்காலமாக பெண்களை ஒதுக்கியே வைத்துவிட்டோம் அல்லவா… அதைக் கேள்விக் கேட்டு, சுயமாகச் சிந்திக்க தொடங்கி விட்டோம் என்கிற துடுக்கு நிறைய இடத்தில் அவர்களிடம் வெளிப்படுகிறது. ஆகவே, வருங்காலம் வழிதிறக்கும்.








தற்போது தாங்கள் எழுதிய புத்தகம்?
‘முருகபூபதியின் 23 நாடகங்கள்’ என்னும் தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விழைவது…?
கலைப்பாதையை நோக்கி நடக்கையில் தங்களுக்கான பிரச்னையின் தீர்வும் அங்கேயே கிடைக்கிறது. இலக்கியமோ, நாடகமோ, இசையோ, ஓவியமோ கலையை நோக்கிச் செல்கையில் குழப்பமான விஷயங்களைச் சரி செய்வதற்கான அறிவும் கலை இலக்கியத்திலேயே கிடைக்கிறது” என்று கூறி நாடக ஏற்பாடுகளில் தீவிரமானார்.