
விஜய்யின் சனிக்கிழமை பிரசாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன. கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
லோக்கல் பிரச்னைகளைக் கையிலெடுத்து திமுக அமைச்சர்களை விமர்சித்த விஜய், முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தையும் கூடுதல் டோஸ் கொடுத்து விமர்சித்தார்.
‘குடும்பத்துக்காக கொள்ளையடிக்குற உங்களுக்கே அவ்வளவு இருந்தா, உழைச்சு சம்பாதிச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்.’ என முதல்வரின் குடும்பத்தை நேரடியாக அட்டாக் செய்தார்.
விஜய்யின் பிரசாரம் முழுமையும் திமுக மீதான விமர்சனங்களாலயே நிரம்பியிருந்தது.
விஜய்க்கு திமுக தரப்பிலிருந்தும் பதிலடி கொடுத்து வருகின்றனர். விஜய் பேசியவற்றைப் பிரித்து திமுக ஐ.டி.விங் ஸ்கேன் ரிப்போர்ட்களை கொடுத்து வருகிறது. இதில் ஆச்சரியமில்லை.
அந்த பிரசாரத்தில் விஜய் அதிமுக குறித்து பேசவே இல்லை. ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் விஜய்யை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
சிவாஜிக்குக் கூடாத சிரஞ்சீவிக்குக் கூடாத கூட்டமா? விஜய்க்கு கூடியிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியும் செல்லூர் ராஜூவும் விஜய்யை சீண்டியிருக்கின்றனர்.
விஜய் விஷயத்தில் மென்மையான போக்கைக் கடைபிடித்து வந்த அதிமுக, திடீரென அவர் மீது சீறுவது ஏன்? என விரிவாக பேச மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் மற்றும் அதிமுகவின் கல்யாணசுந்தரம் ஆகியோரைத் தொடர்புகொண்டு பேசினோம்.
திமுகவை கூர்மைப்படுத்தி பேசும் விஜய்
இதுதொடர்பாக முதலில் பேசிய மூத்தப் பத்திரிகையாளர் ப்ரியன், “திமுக எதிர்ப்பைத்தான் விஜய் கூர்மைபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திருச்சி, அரியலூர் கூட்டத்தில் திமுக நிறைவேற்றாத வாக்குறிதிகள் குறித்துப் பேசியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி வாக்கு திருட்டுகளைச் செய்து ஜனநாயகப் படுகொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பாஜகவையும் விமர்சித்து பேசியிருந்தார்.
கடந்த சனிக்கிழமை (செப்.21) நாகையில் மேற்கொண்ட பரப்புரையில் வெளிநாட்டு முதலீடா? இல்லை வெளிநாட்டில் முதலீடா? என்று இன்னும் கூர்மையாக ஸ்டாலினை நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார்.

பதட்டப்பட வைக்கும் விஜய்
அதேபோல நாகையில் உள்ள உள்ளூர் பிரச்னைகள் குறித்தும் பேசினார். விஜய்யை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்.
திமுக எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தி, திமுக எதிர்ப்பு வாக்குகளைக் கவர நினைக்கிறார்.
இது அதிமுகவிற்கு ஒரு வித பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது. அதிமுக பலவீனமாக இருக்கிறது. அதன் கூட்டணியும் பலவீனமாக இருக்கிறது. தினகரன், ஓபிஎஸ், சசிகலா என யாரும் இல்லை.
தேமுதிக, பாமக கூட்டணியில் இருக்கிறார்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை.
அதுவும்போல எடப்பாடி பிரசாரம் செய்த 140 இடங்களின் கூட்டத்தை 2 மாவட்டங்களின் விசிட்டிலேயே விஜய் காலி செய்துவிட்டார். அந்த அளவிற்கு விஜய் கூட்டத்தைச் சேர்த்துவிட்டார்.
எடப்பாடி முதலமைச்சராகவா? விஜய்…
ஆனால் எடப்பாடிக்கு அப்படி இல்லை. எல்லா கட்சிகளும் பணத்தையும் வேறுவிதமான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துதான் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது.
ஆனால் விஜய்க்கு தன்னெழுச்சியாகவே கூட்டம் வருகிறது. அந்தக் கூட்டம் ஓட்டாக மாறிவிடக்கூடாது என்பதற்காவே இந்தக் கூட்டம் ஓட்டாக மாறாது என்று திமுக- அதிமுக என இரு கட்சியினரும் கூறி வருகின்றனர்.
என்னைப் பொறுத்தவரை இந்தக் கூட்டம் ஓட்டாக மாறாது என்று உறுதியாக நம்மால் தற்போதைக்குச் சொல்லமுடியாது.

திமுக எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தி அதிமுக வாக்காளர்களிடமும் விஜய் சில வாக்குகளை வாங்க முயற்சிப்பதுதான் அதிமுகவின் கவலையாக இருக்கும்.
அதனால்தான் முன்னாள் அமைச்சர்கள் நீங்கள் உண்மையிலேயே திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் எங்களுடன் வந்து சேருங்கள் என்று சொல்கிறார்கள்.
எடப்பாடி முதலமைச்சராகவா? விஜய் கட்சியை ஆரம்பித்து வைத்திருக்கிறார். விஜய் அவரை ஒரு முதன்மை சக்தியாக நினைக்கிறார். அதிமுக பலவீனமாக இருப்பதால் இரண்டாவது பெரிய கட்சியாக மாறும் முயற்சியை விஜய் எடுக்கிறார்” என்று கூறினார்.
பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை
இதனைத்தொடர்ந்து அதிமுகவின் கல்யாணசுந்தரத்திடம் பேசினோம். ‘விஜய் கட்சி ஆரம்பித்த தொடக்கத்தில் அதிமுகவினர் அவரைப் பற்றி பேசாமல் இருந்தப்போது ஏன் பேசவில்லை என்று கேட்டார்கள்? இப்போது அதிமுகவினர் விஜய்யைப் பற்றி பேசினால் ஏன் பேசுகிறார்கள் என்று கேட்கின்றனர்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம். அந்தவகையில் விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கு நாங்களும் வாழ்த்தை தான் சொல்கிறோம்.
அரசியல் நிகழ்வுகளில் பத்திரிகையாளர்கள் விஜய் குறித்து கேள்வியை முன் வைக்கும்போதுதான் எங்களின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவோ, ராஜேந்திர பாலாஜியோ பதில் சொல்கிறார்கள். அது அவர்களுடைய கருத்து அதனை பதிலாகச் சொல்கிறார்கள்.

இதில் விஜய்யைப் பார்த்து பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தேர்தல் காளத்தை சந்திக்கப் போகிறோம். அதில் மக்கள் யாரை அதிகப்படியாக ஆதரிக்கிறார்களோ அந்த அளவிற்கான வாக்குளைப் பெறப் போகிறார்கள்.
அதிமுக மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்திருக்கக்கூடிய ஒரு கட்சி. சொல்லப்போனால் இன்றளவும் தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக இருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதை நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். கூட்டணி இல்லாமல் திமுகவால் தேர்தலில் வெல்ல முடியாது.
திமுகவிற்கு தான் விஜய்யைப் பார்த்து அச்சம்
அதிமுக 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் நின்று ஆட்சியைப் பிடித்துக்காட்டிய இயக்கம்.
விஜய் மட்டுமின்றி வேறு யாருக்கும் நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
எங்களின் இலக்கு 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது தான்.
அதற்காகத்தான் அனைவரும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரே சிந்தனையுடன் தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

எந்தக் குழப்பமும் இல்லை. தெளிவான பாதையில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
விஜய்க்கு கூடிய கூட்டம் திமுகவிற்கு கூடவில்லை என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
அதனால்தான் அவர்கள் நடுங்குகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி விஜய் கூட்டத்தைக் கூட்டவிடாமல் தடுப்பதற்கான வேலைகளில் திமுகவினர் ஈடுபடுகின்றனர். அதனால் திமுகவிற்கு தான் விஜய்யைப் பார்த்து இயல்பான அச்சம் எழுகிறது” என்றார்.