
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உடன்குடியில் நடைபெற்றது.
இதில், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தை தலை குனிய விட மாட்டோம் என்ற உறுதிமொழியை நாம் எடுத்துள்ளோம். எதற்கு என்றால், கல்விக்கான நிதி உரிமை உள்ளிட்ட தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய எதையும் ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய பெண் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் இவர்களுடைய உரிமை, இவர்களுக்கு வர வேண்டிய நிதி உள்ளிட்டவற்றைப் பெறுவதற்காகத் தொடர்ந்து போராடுவோம்.
உலக நாடுகளைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, எந்த நாடுகளோடும் நல்லுறவு வைத்துக் கொள்ள முடியவில்லை. நேபாளம், சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நல்லுறவு இல்லாமல் இருந்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் வெற்றி பெற்ற போது இங்கே கொண்டாடினார்கள். ஆனால் தற்போது, இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய பொருட்கள் அனைத்திற்கும் 50 சதவீத வரியை விதித்துள்ள காரணத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருகிறார். ஆனால், மோடி இதுபோல் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
தமிழகத்திற்குத் துரோகம் செய்து வரும் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளது. தற்போது அ.தி.மு.க அலுவலகத்தையே எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு மாற்றிவிட்டார். அமித்ஷாவின் வீடுதான் அ.தி.மு.கவின் அலுவலகமாக உள்ளது.
தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கக் கூடிய மத்திய அரசு, தமிழர்களின் நாகரீகத்தையும் தொன்மையையும் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில்தான், கீழடி அகழ்வாராய்ச்சி மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகள் குறித்து எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்து வருகிறது.
தமிழகத்திற்குப் பல்வேறு துரோகங்களைத் தொடர்ந்து செய்து வரும் பா.ஜ.கவோடு கைகோர்த்து வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பகையாக இருக்கக்கூடியவர்கள் யார் என்பதை உணர்ந்து, வரும் தேர்தலில் நாம் விழிப்புணர்ச்சியுடன் வாக்களிக்க வேண்டும்” என்றார்.