
கேரள அரசின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பம்பாவில் கடந்த 20-ம் தேதி அகில உலக ஐயப்ப சங்கமம் மாநாடு நடத்தப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்த அந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டர். அந்த மாநாட்டுக்கு எதிராக சபரிமலை கர்மசமிதி சார்பில் பந்தளத்தில் சபரிமலை பாதுகாப்பு சங்கமம் என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “ஐயப்பனுக்கு எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் கேரளாவில் பக்தர்கள் வெகுண்டு எழுந்து நின்று கொண்டிருக்கிறார்கள். 2018 -2019 ஆண்டுகளில் ஐயப்பனுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டபோது கேரள மாநிலமே ஒன்றாக எழுந்து நின்றது. அதே போன்று ஓர் உணர்ச்சியை இப்போது இந்த மண்ணில் பார்க்க முடிகிறது. பந்தள மண்ணில் உணர்ச்சியோடு வந்திருக்கும் ஒவ்வொருவரும் சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஒற்றைக் கருத்தோடு இங்கு வந்திருக்கிறோம். 1200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனுடைய வழித்தோன்றலாக பந்தள ராஜாக்கள் இங்கு வந்தார்கள். இப்போதுதான் நமக்குள் ஒரு கோடு போட்டு தமிழன், மலையாளி என பிரித்து வைக்கிறோம். 1200 ஆண்டுகளுக்கு முன்பு நமக்குள் அந்த கோடு கிடையாது. எல்லோருமே தர்மத்தை பின்பற்றக்கூடிய மக்களாகத்தான் வந்தோம். ஆகவே நான் இன்று இங்கு ஒரு தமிழனாக வரவில்லை சனாதன தர்மத்தை பாதுகாக்க கூடிய ஆயிரக்கணக்கான சிப்பந்திகளில் ஒருவனாக நான் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறேன். கடந்த 20-ம் தேதி ஒரு ஆச்சரியமான விஷயத்தை நாம் பார்த்தோம். அகில உலக ஐயப்ப பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலத்தின் கம்யூனிஸ்ட் அரசு ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். சனாதன தர்மத்தை வேரோடு அறுக்க வேண்டுமென்று நினைக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா கொசுவை போன்றது அதை ஒழிக்க வேண்டும் என சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசினார். கேரள முதல்வர் பினராயி விஜயன் பம்பா மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை அழைக்கும் போதே இது ஐயப்பனுக்காக நடத்தக்கூடிய ஒரு நிகழ்வு கிடையாது என நமக்கு தெரிந்துவிட்டது. மக்களை ஏமாற்றி அரசியலுக்கு ஓட்டு வாங்குவதற்கான ஒரு நிகழ்வு என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது. நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருக்கக்கூடிய குழந்தை ஐயப்பனை பார்ப்பதற்கு கோடான கோடி பக்தர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயனையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் நான் நாஸ்திக் டிராமாச்சாரிகள் என அழைப்பேன். நாத்திகர்களான அவர்கள் பக்தியின் பெயரால் அரசியல் நாடகம் நடத்துகிறார்கள்.
2018, 2019 ஆண்டுகளில் காவல்துறையை வைத்து ஐயப்ப பக்தர்களை அடித்து உதைத்துவிட்டு, காவல்துறையை வைத்து பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்று வழிபடுவதற்கு அழைத்துச் சென்றார்கள். அப்படிப்பட்ட பினராயி விஜயனுக்கு ஐயப்ப மாநாடு நடத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு உலக முருக பக்தர்கள் மாநாட்டை பழனியில் நடத்தினார்கள். பக்கத்தில் இருக்கும் திருடனை பார்த்து மற்றவர் திருடன் மிக எளிதாக கற்றுக் கொள்வான். தமிழ்நாட்டில் சனாதன தர்மம் வேண்டாம் என நினைக்கக் கூடிய தி.மு.க அகில உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்தியதை பார்த்து இன்று கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு அகில உலக ஐயப்பா மாநாடு நடத்துகிறார்கள். ஐயப்ப மாநாட்டில் பினராயி விஜயன் பகவத் கீதை பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார். பகவத் கீதையின் 12-வது அத்தியாயத்தில் கூறப்பட்ட பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கடவுளை நம்பாத பினராயி விஜயன் பாடம் எடுக்கிறார். அவர் அதே பகவத் கீதையில் 16-வது அத்தியாயத்தில் 21-வது ஸ்லோகத்தை பினராயி விஜயன் படிக்க வேண்டும். காமம், பேராசை, கோபம் ஆகியவை ஒரு மனிதனை நரகத்துக்கு அழைத்துபோகும் மூன்று வழிகள் என கூறப்பட்டுள்ளது. இந்த மூன்றும் கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை 46 ஆயிரம் கோயில்களை நிர்வாகம் செய்து வருகிறது. 1985-ல் 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கோயில்களுக்கு இருந்தன. இன்று நான்கு லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. 40 ஆண்டுகளில் தமிழ்நாட்டு கோயில்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. சேகர்பாபு ஐயப்ப மாநாட்டுக்கு வந்து பந்தளத்தில் 5 ஏக்கர் நிலத்தை எங்களிடம் கொடுங்கள் எனக் கேட்கிறார். மக்களை ஏமாற்றுவதற்கு இரண்டு அரசுகளும் சேர்ந்துள்ளன. ஐயப்பனை அரசியல் ஆக்கி அதன் மூலமாக லாபம் சம்பாதித்து, மக்களை ஏமாற்றுவதற்காக வேலைகளை கம்யூனிஸ்ட் செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் 10 முதல் 50 வயது பெண்களை சபரிமலையில் அனுமதிக்க மாட்டோம் என சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட்டை போடுங்கள். அதை விட்டுவிட்டு போலியாக ஏன் ஐயப்ப மாநாடு நடத்துகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சபரிமலை வருமானம் 1300 கோடி ரூபாய். நூறு கோடி ரூபாய்க்கு ரோட்டை மட்டும் போட்டுவிட்டு, தமிழ்நாட்டின் தி.மு.க அரசு போன்று கேரள அரசும் கோயில் பணத்தை கொள்ளையடிக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் முன் இருக்கும் துவார பலாகர்களின் தங்ககவசம் 42.800 கிலோ இருக்க வேண்டும். அதை சென்னைக்கு கொண்டுசென்று பழுதுபார்த்துவிட்டு திரும்ப வந்தபோது 38.200 கிலோ தங்கம் இருக்கிறது. ஐயப்பனின் பக்கத்தில் இருக்கும் துவார பாலகர்களை காப்பாற்ற முடியவில்லை. அதில் 4 கிலோ தங்கத்தை காணவில்லை. நீங்கள் ஐயப்பனை காப்பாற்றபோகிறீர்களா. அரசியல் மாற்றம் கட்டாயம் வர வேண்டும். அரசு பிடியில் இருந்து கோயில்களை காப்பாற்ற கம்யூனிஸ்டுகளை வெளியேற்ற வேண்டும்” என்றார்.