
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அதே பகுதியிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
குடும்பச் சூழல் காரணமாக, விருத்தாசலத்தில் முத்து என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் மாலை நேரத்தில் மட்டும் பணியாற்றி வந்திருக்கிறார்.
நேற்று மாலை செல்போனில் பேசிக்கொண்டே கடையின் பின்புறம் சென்றிருக்கிறார் கண்மணி. சிறிது நேரத்தில் கடை ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் ஊழியர் ராஜ்குமார் என்பவர், கண்மணி தூக்குப் போட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
அதைக் கேட்டு அதிர்ந்துபோன கடை ஊழியர்கள், பின்புறம் இருக்கும் அறைக்கு ஓடியிருக்கின்றனர். ஆனால் அதற்குள் அங்கு தன்னுடைய துப்பட்டாவில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார் கண்மணி. அதையடுத்து ஊழியர்கள் விருத்தாசலம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸார், கண்மணியின் சடலத்தைக் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “தற்கொலை செய்துகொண்ட பெண்ணுக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை மற்றும் தம்பி இருக்கின்றனர்.
குடும்ப வறுமை காரணமாகவே கண்மணி பார்ட் டைம் வேலைக்கு வந்திருக்கிறார். கடையின் உரிமையாளர் முத்துவின் தந்தைக்கு இரண்டு மனைவிகள்.
அதில் இரண்டாவது மனைவியின் மகன்தான் ராஜ்குமார். தம்பி என்ற முறையில் அவரை கடையைப் பார்த்துக் கொள்ள உடன் வைத்திருந்தார் முத்து. அப்போதுதான் கண்மணிக்கும், ராஜ்குமாருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் கடையை சரியாக பார்த்துக் கொள்வதில்லை என்று, அவரைக் கடையில் இருந்து நிறுத்திவிட்டார் முத்து. அதில் சோகமான கண்மணி, ராஜ்குமாரிடம் மணிக்கணக்கில் செல்போனில் பேசியும், கடைக்கு வெளியில் அவரைச் சந்தித்தும் வந்திருக்கிறார்.

ராஜ்குமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். அந்த விவகாரம் தெரிந்ததால்தான் கண்மணி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது, வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறோம்.
கண்மணியும், ராஜ்குமாரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று ராஜ்குமாரிடம் கூறியிருக்கிறார் கண்மணி.
அதன்பிறகுதான் கடைக்கு போன் செய்து தகவல் தெரிவித்திருக்கிறார் ராஜ்குமார். தற்போது தலைமறைவாக இருக்கும் ராஜ்குமார் கிடைத்தால்தான், தற்கொலைக்கான காரணம் தெரிய வரும்” என்றனர்.