
புதுடெல்லி: கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இண்டியா விமான விபத்து தொடர்பாக நியாயமான, விரைவான விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரலும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவ விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 241 பயணிகள் உயிரிழந்தனர். இவர்களில், 169 பேர் இந்தியர்கள், 52 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசியர்கள், ஒருவர் கனடா நாட்டவர். இவர்களோடு, 12 விமானப் பணியாளர்களும் உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது, மருத்துவ விடுதி பகுதியில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். பிரிட்டன் இந்தியரான விஸ்வேஷ்குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.