
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ இந்தாண்டு கடைசியில் திரைக்கு வருகிறது. அவரது ‘சர்தார் 2’ படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதால், இப்போது மூன்றாவதாக ‘மார்ஷல்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் கார்த்தி. நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்குகூட அதன் படப்பிடிப்பிற்கு இடையே தான் வந்திருந்தார்.
அவர் நடிகர் சங்கத்தின் பொருளாளராக இருப்பதால் சக நடிகர்களையும் அரவணைத்துச் செல்வதாக சங்க உறுப்பினர்களே பாராட்டி வருகின்றனர். அப்படித்தான் விஷ்ணு விஷாலின் தம்பி ஹீரோவாக அறிமுகமான ‘ஓஹோ எந்தன் பேபி’ படவிழாவிற்கும், கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் படப்பூஜைக்கும் நேரில் பங்கேற்றார். அதைப் போல விஜய் சேதுபதியின் மகன், இயக்குநர் முத்தையாவின் மகன், கே.பி.ஒய், பாலா, சண்முகப்பாண்டியன் என பலரின் படங்கள் குறித்தும் சமூக வலைதளத்தில் வாழ்த்தியும், நேரில் அழைத்தும் பாராட்டியிருந்தார். இது சங்க நிர்வாகிகளை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் டிசம்பரில் திரைக்கு வருமென அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்த்ராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், வடிவுக்கரசி, மதூர் மிட்டல் எனப் பலரும் நடித்துள்ளனர். நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டாலும், பேட்ச் ஒர்க் வேலைகள் இன்னும் சில நாட்கள் மீதமிருக்கின்றன. தீபாவளிக்கு ‘வா வாத்தியார்’ டீசரை எதிர்பார்க்கலாம் என்றும், நவம்பரில் பேட்ச் ஒர்க் படப்பிடிப்புகளை முடித்துவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்தார் 2
‘சர்தார் 2’ படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். கார்த்திக்கு இதில் டபுள் ஆக்ஷன். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், ஷாரா, யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ‘வா வாத்தியார்’, ‘சர்தார்’ இவை இரண்டுக்குமே ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்தான் கேமராமேன். சர்தார் 2 படத்தை அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

கார்த்தியின் 29வது படமான ‘மார்ஷல்’ படப்பிடிப்பு சென்னையைத் தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் நடந்து வருகிறது. ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் இந்தப் படம் ஒரு பீரியட் ஃபிலிம். ராமேஸ்வரம் – இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை இது என்கிறார்கள். கார்த்தியின் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தவிர சத்யராஜ், சேத்தன், சந்தோஷ் பிரதாப் உள்பட பலர் நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் சீனியர் நடிகர் ஒருவர் நடிக்கிறார், இது குறித்து அவரிடம் பேசி வருவதாகச் சொல்கிறார்கள்.

ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து 5 வாரங்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், அதன்பிறகு சென்னையிலும் படப்பிடிப்பு தொடரும் என்றும் செய்தி. இது பிரீயட் படம் என்பதால் அடுத்தாண்டு பிப்ரவரி வரை படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். இதனை முடித்துவிட்டு அவர் லோகேஷின் ‘கைதி 2’விற்கு வருவார் என்கிறார்கள்.