• September 22, 2025
  • NewsEditor
  • 0

நான் அவங்க இல்லை!

இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து நான்கு ஏழை மாணவர்களை கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் நடிகர் பிளாக் பாண்டி. சென்னையின் கல்லூரி ஒன்றில் அவர்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர இருக்கிறது பாண்டி நிறுவிய ‘உதவும் மனிதம்’ அறக்கட்டளை.

இன்று அதிகாலை அந்த மாணவர்களுடன் சென்னை வந்திறங்கிய பாண்டியிடம் பேசினோம்.

”பாண்டி இலங்கைத் தமிழர். அவருடைய சொந்தக்காரங்க அங்க இருக்காங்க. அதனால்தான் அடிக்கடி இலங்கை போயிட்டு வர்றார்னு சொல்றாங்க சிலர். ஐரோப்பிய நாடுகள்ல வசிக்கிற இலங்கைத் தமிழர்கள்கிட்ட இருந்து பாண்டிக்கு நிறையப் பணம் வருது’னு சொல்றாங்க சிலர்.

யூ டியூப்களில் இந்த மாதிரி கன்னா பின்னான்ன்னு வர்ற தகவல்களுக்கெல்லாம் உங்க மூலமா ஒரு விஷயத்தைச் சொல்லிக்கலாம்னு நினைக்கிறேன்.

‘கனா’ காலத்துல நிகழ்ந்த நிஜம்!

முடிஞ்சதை நாலு பேருக்குச் செய்யலாம்னு நான் நினைச்சது ‘கனா காணும் காலங்கள்’ முடிஞ்ச சமயத்துலதான். அப்ப லண்டன்ல இருந்து ஒரு ரசிகர் பேசினார். இலங்கைத் தமிழர். அந்த சீரியல் பத்திப் பேசி எனக்கு அறிமுகமானார். நண்பரா அறிமுகமாகி ஒருகட்டத்துல நெருக்கமாகிட்டார். சினிமா தாண்டி பேச்சு வளர்ந்தப்பதான், எங்களுக்குள் இருந்த சில நல்ல குணங்கள் ஒத்துப் போச்சு.

பிளாக் பாண்டி

‘உங்களுக்கு இருக்கிற பிரபல்யத்தை வச்சு ஏதாவது செய்யலாமே’னு அவர் சொன்னது என்னை ரொம்பவே யோசிக்க வச்சது. உடனே அக்கம் பக்கத்துல தெரிஞ்ச சர்க்கிள்ல உதவி எனக் கேட்டவங்களுக்கு சின்ன அளவுல உதவி செய்ய ஆரம்பிச்சோம்.

அந்த லண்டன் ரசிகர் மூலமா இலங்கையில் இருந்து மேலும் சில நண்பர்கள் கிடைச்சாங்க. இங்க என் நட்பு வட்டத்தில் உதவுகிற குணம் கொண்ட சிலர் சேர்ந்தாங்க. எங்க வட்டம் பெரிசாச்சு.

அப்பதான் ‘உதவும் மனிதம்’கிற பெயரில் அறக்கட்டளயைத் தொடங்கினேன். அப்பவே சில விஷயங்களைத் தெளிவா யோசிச்சிட்டேன்.

ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு இருக்கு!

என் சொந்தக் காசைக் கொடுத்த வரைக்கும் நான் யாருக்கும் கணக்கு சொல்லத் தேவையில்லை. ஆனா உதவி தேவைப்படுகிறவங்களுக்கும் உதவி செய்யத் தயாரா இருகிறவங்களுக்கும் இடையில் ஒரு பாலமா நான் இருக்க முடிவு செய்ததுமே காசு விஷயத்துல ஒரு ரூபாய்னாலும் ஒளிவு மறைவில்லாம இருக்கணும்கிறது அதுல முதல் விஷயம். அதனால அறக்கட்டளையைப் பதிவு செய்து அரசுக்கு வரவு செலவு காட்டறது வரை பக்க்காவா டாகுமென்டேஷன் பண்ணி வச்சோம்.

ரெண்டாவது உதவி கிடைக்கப் பெறுகிறவர்கள் விருப்பப்பட்டாலே ஒழிய, அவர்கள் குறித்த தகவலைப் பொது வெளியில் தெரியப்படுத்தக்கூடாதுங்கிறது. நடிகை சிந்து மாதிரி சிலர் வெளியில சொல்லச் சொன்னதால அப்ப அதுபத்திச் சொல்லியிருந்தோம்.

‘அங்காடித்தெரு’ சிந்து, பிளாக் பாண்டி

மத்தபடி `உதவும் மனிதம்’ செய்யற விஷயங்களைப் பெரிசா விளம்பரப்படுத்தறதில்லை.

கல்வி, மருத்துவ உதவிகள் தவிர அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் தேவைப்படுவோருக்கும் செய்து தந்துக்கிட்டிருக்கோம். இதுவரை நூத்துக்கணக்கானவங்க எங்க மூலம் பலன் அடைஞ்சிருக்காங்க.

அதேபோல உதவி கிடைக்கப் பெற்றவங்க விபரம் உதவி செய்யறவங்களுக்கு நிச்சயம் தெரியும். பாண்டி உதவி செய்யற பின்னணி இதுதாங்க.

மனசு இல்லாதவனுக்குப் பொறுக்காது!

ஏன் இதைச் சொல்றேன்னா, இப்ப காலம் ரொம்ப டேஞ்சரானதா இருக்கு. நல்லா சம்பாதிச்சா அடுத்தவனுக்கு ஒண்ணும் செய்ய மாட்டான்னு திட்டுவாங்க. ஏதாவது செஞ்சாலும் செய்ய மனசு இல்லாதவங்களை அது உறுத்தும். எதையாவது சொல்லி அதை தடுத்து நிறுத்தாம ஓயமாட்டாங்க.

என் விஷயத்துலயே ‘சின்ன வயசுல இவன் எப்படி இவ்வளவு உதவி செய்யறான்’னு கேக்கறாங்க. ‘யாரோ பெரிய ஆள் ஒருத்தருடைய பினாமியா இருப்பான்’கிறாங்க. ‘இவனுக்கு வருமான என்ன’னு அலசறாங்க. என்னென்னமோ பேசறாங்க. பாலா விஷயம் உங்களுக்குத் தெரியுமே, ‘சர்வதேச கைக்கூலி’ங்கிற லெவலுக்கு அது போயிட்டிருக்கு.

பிளாக் பாண்டி

பாலா விஷயம் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா என் விஷயத்துல இதுதான் நிலவரம். இதைச் சொல்லிட்டா பேசாம இருப்பாங்களானு பார்க்கலாம்னுதான் சொல்றேன்’ என்கிறார்.

இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்த விஷயம் குறித்துக் கேட்டபோது, ‘ரெண்டு மூணு தடவை இலங்கை போயிட்டு வந்ததுல அங்கயும் கஷ்டப்படுகிற தமிழர்கள் பத்தித் தெரிய வந்தது. ரெண்டு நாட்டுச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இங்க உதவ முன்வந்த சில கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பால் இது சாத்தியமாச்சு. ‘உதவும் மனிதம்’ கிளையை இலங்கையிலும் சீக்கிரமே தொடங்க இருக்கிறோம்’ என்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *