
நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் பெண்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை பறித்து வருகின்றனர். சைபர் குற்றங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் நன்கு படித்து பெரிய வேலையில் இருப்பவர்கள் கூட டிஜிட்டல் கைது நடவடிக்கையில் சிக்கி இருக்கின்றனர். இப்போது பா.ஜ.க எம்.பி. ஒருவரின் மனைவியும் டிஜிட்டல் கைது நடவடிக்கையில் சிக்கி பணத்தை இழந்திருக்கிறார்.
கர்நாடகா மாநில பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.பி.சுதாகர் மனைவி பிரீத்திக்கு கடந்த மாதம் 26ம் தேதி மர்ம நபர் போன் செய்து தான் மும்பை சைபர் பிரிவு போலீஸில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆவணங்களைப் பயன்படுத்தி சத்பத் கான் என்பவர் கிரெடிட் எடுத்து சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மோசடியில் ஈடுபட்ட கான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் உங்களை அடையாளம் கண்டதாகவும், அதனை உறுதி செய்ய வீடியோ காலில் வரும்படி கேட்டுக்கொண்டார். வீடியோ காலில் வரவில்லையெனில் உங்களது ஆவணங்கள் மற்றும் வங்கிக்கணக்குகள் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து பிரீத்தி வீடியோ காலில் வந்தார்.
அவரை டிஜிட்டல் முறையில் கைது செய்த சைபர் கிரிமினல்கள் பிரீத்தியிடம் அவரது வங்கிக்கணக்கு விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர். இதைத் தெரிந்து கொண்ட பிறகு உங்களது கணக்கை சரி செய்ய ரூ.14 லட்சத்தை தாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அதோடு விசாரணைக்குப் பிறகு அந்தப் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவோம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் பிரீத்தி அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு ரூ.14 லட்சத்தை அனுப்பினார். பணத்தை அனுப்பியவுடன் சைபர் கிரிமினல்கள் போன் இணைப்பை துண்டித்துக்கொண்டனர். அதனை தொடர்ந்தே தான் மோசடி செய்யப்பட்டது பிரீத்திக்கு தெரிய வந்தது. இதையடுத்து பிரீத்தி இது குறித்து சைபர் பிரிவில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.