
அஜித்தின் குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருந்தது.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருந்த அப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த வின்டேஜ் பாடல்களின் காட்சிகள், ரிலீஸ் சமயத்தில் பெரும் வைரலானது.
இளையராஜாவின் இளமை இதோ இதோ’, ஒத்த ரூபாய் தாரேன்’, என் ஜோடி மஞ்சக் குருவி’ ஆகியப் பாடல்களும் படத்தின் முக்கியக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
தன்னுடைய பாடல்களை தன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியிருப்பதாக இளையராஜாவின் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத்தில் இடம்பெற்றிருக்கும் இளையராஜாவின் பாடல்களை நீக்க உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து `குட் பேட் அக்லி’ திரைப்படம் நீக்கப்பட்டது.
தற்போது படத்தில் சில மாற்றங்களுடன் மீண்டும் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

அர்ஜூன் தாஸின் கதாபாத்திர என்ட்ரி காட்சியில் இதற்கு முன் ஒத்த ரூபா தாரேன்’ பாடல் இடம்பெற்றிருந்தது.
இப்போது அதற்கு பதிலாக படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த பின்னணி இசையையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அஜித்தின் சண்டைக் காட்சியில் இடம்பெற்றிருந்த இளமை இதோ இதோ’ பாடலுக்கு பதிலாக இப்படத்திற்காக டார்க்கீ பாடியிருந்த `புலி புலி’ பாடலையே வைத்திருக்கிறார்கள்.
இது போல, இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்த காட்சிகளின் பின்னணி இசையில் மட்டும் சில மாற்றங்களை மேற்கொண்டு இப்போது மீண்டும் மக்கள் பார்வைக்கு படத்தைக் கொண்டு வந்திருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.