
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை அரசு மேல் நிலைப்பள்ளியில், திமுக கொடி கலரில் தயாரான கேக்கை வெட்டி கொண்டாடிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் பஞ்சாயத்துக்கு இழுத்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக.
திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் 73-வது பிறந்த நாள் 19-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை வித்தியாசமாக கொண்டாட நினைத்த அவரது ஆதரவாளர்கள், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக அங்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை பள்ளி மாணவ – மாணவியர் வரிசையில் நின்று வரவேற்றனர்.