
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கீழ ஏம்பல் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாவீரன் எனும் சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நாடோடி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இந்த மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, கடுமையாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாணவனுடன் சம்பந்தமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், அந்த தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பத்து பிரிவுகளின் கீழ் மீமிசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல், தனது மகன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவரது பெற்றோர் முறையிடச் சென்ற போது அவர்களை அவதூறாகப் பேசி தாக்கியதாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதில் ஆரோக்கியதாஸ் என்பவர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை பள்ளி தலைமை ஆசிரியர் கடுமையாகத் தாக்கிய விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.