• September 22, 2025
  • NewsEditor
  • 0

நவராத்திரி

நவராத்திரி அம்பிகையை வழிபட உகந்தநாள். நவ என்றால் ஒன்பது என்றும் புதிய என்றும் பொருள். அம்பிகை இந்த ஒன்பது நாள்களும் புதுமையாக எழுந்தருளி நமக்கு அருள்பாலிப்பாள் என்பதுதான் இந்த வைபவத்தின் தத்துவம். மகிஷன் என்னும் அசுரனை அம்பிகை வதம் செய்த லீலையையே நவராத்திரி நாள்களில் கொண்டாடுகிறோம்.

சண்டிகாதேவி

தேவர்களையும் முனிவர்களையும் காத்த அம்பிகையை மகிஷாசுர மர்த்தினியாக இந்த நாள்களில் வழிபடுவது விசேஷம். சரி, மகிஷாசுர மர்த்தினியாக, சண்டிகா தேவியாக அம்பிகையை வழிபட்டால் என்ன கிடைக்கும்?

இக்கட்டான தருணங்களில் துர்கையை மகிஷாசுரமர்த்தினியாக சண்டிகா தேவியாக நினைத்துத் துதித்தால் இக்கட்டுகள் விலகும். தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். பலருக்கு எதிர்காலம் குறித்த பயம் எப்போதும் இருக்கும். துர்கையை வழிபட்டால் அந்த பயம் முற்றிலும் அகலும். குறிப்பாக நோய்கள் விலகி ஆரோக்கியமும் ஆனந்தமும் தேடிவரும்.

இப்படி அற்புதமாக அம்பிகை சண்டிகாதேவியாக அருள்பாலிக்கும் தலம் மயிலாடுதுறை அருகே உள்ளது. வாருங்கள் அந்த அற்புதமான தலத்தைக் குறித்து அறிந்துகொள்வோம்.

சண்டிகாதேவி

கிடாத்தலைமேடு

மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் பயணித்தால் குத்தாலத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கிடாத்தலைமேடு என்னும் கிராமம்.

மகிஷனின் சிரத்தின் மீது தன் திருப்பாதத்தை வைத்து நிற்கும் திருக்கோலத்தில் அம்பிகை அருள்வதால் இதற்கு, ‘மகிஷசிரோன்னபுரம்’ என்று பெயர்வந்தது. இதையே கிடாத்தலைமேடு என்று அழைக்கலாயினர்.

இல்லறம் இனிக்க அருளும் அம்பிகை

லலிதா சகஸ்ர நாமம் அம்பிகையை ‘காமேச்வர பிராணநாடி’ என்று போற்றுகிறது. கிடாத்தலைமேட்டில் எழுந்தருளியிருக்கும் அம்பாளின் திருநாமமும் அதுவே. ஆமாம் இங்கு அம்பிகை ‘ஸ்ரீகாமுகாம்பாள்’ என்கிற பெயரிலேயே கோயில்கொண்டிருக்கிறாள்.

சிவனார் ஆசைகளைக் கடந்தவர். அதற்கு உதாரணமாகத் திகழ்வதுதான் மன்மதனை எரித்த நிகழ்வு. மன்மத தகனம் நிகழ்ந்த ஊராகக் கருதப்படுவது `குறுக்கை’ எனும் தலம். கிடாத்தலைமேடு இந்த ஊருக்கு அருகில்தான் உள்ளது.

ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான மன்மதன் பொசுங்கிப்போனான். அதன்பின் அவன் தன் உடலும் வலிமையும் பெற வேண்டி சூட்சுமமாக வழிபட்டதலமே கிடாத்தலைமேடு என்கிறார்கள். இங்குள்ள அம்பிகை அவன் வழிபாட்டில் மகிழ்ந்து அவனுக்கு வில்லையும் புஷ்ப பாணங்களையும் தந்தருளினாள் என்கிறது தலபுராணம். காமன் பூஜித்ததால், இத்தலத்து அம்பிகை ‘காமுகாம்பாள்’ என்ற திருநாமத்தை ஏற்றாள்.

இந்த அம்பிகையைச் சுக்ர வாரம் வந்து வழிபட்டால் நலன்கள் பல சூளும். வெள்ளிக் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டால், தம்பதி ஒற்றுமை ஏற்படும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுகூடுவர் என்பது நம்பிக்கை. விவாகரத்துவரை சென்றவர்கள்கூட இங்கு வந்து வேண்டிக்கொண்டால் ஒன்று சேரும் அற்புதம் நடப்பதாகச் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

துர்காதேவி சிவனாரை வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இவ்வூருக்கு உண்டு. மகிஷனை வதம் செய்ததால் அம்பிகைக்கு தோஷம் உண்டானது.

ஈசனின் திருவுளப்படி அவள் இந்தத் தலத்துக்கு வந்து சிவபூஜை செய்து தோஷ நிவர்த்தி பெற்றாள். அத்துடன் வடதிசையை நோக்கி சண்டிகாதேவியாகக் கோயில்கொண்டாள் என்கிறது புராணம். துர்கைக்கு அருளியதால் இத்தலத்து ஈசன் துர்காபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் விளங்குகிறார்.

மூக்குத்தி கேட்ட அம்பிகை

இங்கே மகிஷாசுரமர்த்தினியாய் அஷ்ட புஜங்களோடு சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் ஆகியவற்றை ஏந்தியபடி ஒரு திருக்கரத்தை தொடையில் பதித்தவளாக, மேலும் இரு கரங்களில் அபய வரதம் காட்டியபடி அருள்கிறாள்.

அம்பிகையின் இந்த மூர்த்தத்தை அமைத்தபோது மூக்கணி இல்லாமல் வடித்துவிட்டாராம் சிற்பி. அம்பிகையின் மூக்குத்தி மிகவும் புகழும் மகிமையும் நிறைந்த ஆபரணமாகும். அம்பிகையை `நாஸிகாபரணி’ என ஞான நூல்கள் போற்றுகின்றன. நாஸிகாபரணம் என்றால் மூக்கில் அணியும் ஆபரணம் எனப் பொருள். அந்த மங்கல ஆபரணத்தை அணிவதில் விருப்பமுள்ளவள் அம்பிகை.

பணி பூர்த்தியானதாக அவர் நினைத்திருந்த வேளையில், இரவில் சிற்பியின் கனவில் தோன்றிய அம்பிகை, தன் சிலையில் மூக்கணி விடுபட்டுப் போனதை அவருக்கு உணர்த்தினாள்.

விடிந்ததும் பதறியபடி ஓடோடி வந்த சிற்பி, அம்மையின் சிலையைக் கவனித்தபோது, அவளின் மூக்கில் மூக்குத்தி போடும் அளவு சிறு துளை ஒன்று தானாகவே ஏற்பட்டிருந்ததைக் கண்டு வியந்தார். உடனடியாக மூக்குத்தி ஆபரணம் செய்து அன்னைக்குச் சமர்ப்பித்தார்களாம்.

அந்தகாசுரை அழித்த அன்னை

மகிஷனைப் போன்றே அந்தகாசுரன் என்றொருவன் கொடுமைகள் பல புரிந்து வந்தான். அவனை வதைப்பதற்காக சிவனாரிடமிருந்து உருவான அம்பிகையின் வடிவங்கள் எட்டு. இந்த தேவியரை அஷ்ட மாதாக்கள் என்கின்றன புராணங்கள். பிராம்மி முதலான சப்தமாதரை நாம் அறிவோம். இவர்களில் எட்டாவதாக ஒருதேவியைச் சேர்த்து அஷ்ட மாதாக்கள் எனக் குறிப்பிடுவார்கள். எட்டாவதுதேவியே கெளரிகை எனப்படும் சண்டிகை.

அஷ்ட பைரவர்களில் சம்ஹார பைரவருக்கு இணையானவளாக சண்டிகை விளங்குகிறாள். இந்த தேவி வடிவம் அற்றவளாக, அன்பர்களின் மனத்தில் மறைந்துறைபவளாக சித்திரிக்கப்படுகிறாள். யோகினி, யோக நாயகி, மோகினி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.

யுத்த களங்களில் சப்தமாதர்கள் உக்கிரத்துடன் போர்செய்யும் வேளையில், கண்களுக்குப்புலப்படாமல் எதிரிகளின் மனத்தினைக் கலங்கச் செய்வது இவளது பணியாகும்.

இப்படியான மகிமைகளோடு சண்டிகையின் அம்சமாக இவ்வூர் ஆலயத்தில் தனிச்சந்நிதியில் அருள்கிறாள் துர்காம்பிகை.

அவளின் அற்புதங்களைப் பார்க்குமுன் இந்த ஆலயத்தின் பிரதான அம்பாள் மற்றும் ஈஸ்வரனின் மகிமைகளை அறிந்துகொள்வோம்.

இங்கே தனிச்சந்நிதியில் அருளும் துர்காதேவி வரப்பிரசாதியானவள். அவளின் சந்நிதியில் உள்ள சூலாயுதம் சண்டிகாதேவியாகவே வணங்கப் படுகிறது. அம்மனையும் சூலத்தை யும் தரிசித்து வழிபட்டால், தீயவினைகள் அனைத்தும் விலகும்; நல்லன அனைத்தும் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

அன்னைக்குச் செய்யப்படும் அனைத்து அபிஷேக ஆராதனைகளும் இந்தச் சூலத்துக்கும் நிகழ்கின்றன. தொடர் பிரச்னைகளை சந்தித்துவரும் அன்பர்கள் இங்கே புடவை, மாலை சாத்தி வழிபட்டு நற்பலன் பெறுகிறார்கள்.

அன்னை துர்காம்பிகையின் சந்நிதியில் ஸ்ரீசக்ர மஹாமேரு ஒன்றும் பூஜிக்கப்படுகிறது. மாதாந்திர தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி திதிகளிலும், விஜய தசமியிலும் இந்த ஆலயத்தில் நடத்தப்படும் சண்டி ஹோமம் பிரசித்திபெற்றது.

பிரதான அம்பாளான காமுகாம்பாள் சந்நிதியில் வெள்ளிக் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டால், இல்லறம் இனிக்க வரம் கிடைக்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; நம் விருப்பங்கள் நிறைவேறும்.

தலம்: கிடாத்தலைமேடு

சுவாமி: அருள்மிகு துர்காபுரீஸ்வரர்

அம்பாள்: அருள்மிகும் காமுகாம்பாள்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *