
சென்னை: ஆளுநர் ரவி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரிசையில் தவெக தலைவர் விஜய் அவதூறு அரசியல் செய்வதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் குற்றம் சாட்டியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தவெக தலைவர் விஜய், திமுக அரசு மீனவர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்
வைத்திருந்தார்.
இதற்கு பதிலளித்து தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் விசிக துணை பொதுச்செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசியல் களத்தை மிகவும் கீழிறக்கி, அவதூறுகளாலும், பொய்களாலும், வன்மத்தாலும் மாற்றத் துடிக்கும் சக்திகளாக பாஜக, சங்பரிவார சக்திகள் விளங்குகின்றன. அவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் இட்டு கட்டப்பட்ட பொய்களை விஜய் கையில் எடுத்திருக்கிறார்.