
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில், ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்.. ஓரணியில் தமிழ்நாடு’ பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள். தொழிற்சாலை தொடங்க 45 நாளில் அனுமதி கொடுத்தோம்.
வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால், ஒரு வீட்டைப் பூசிக் கூட குடியிருக்க முடியாத நிலைதான் வடமாநிலங்களில் உள்ளது.
பீகாரில் பா.ஜ.க-விற்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று தெரிந்ததால், 64 லட்சம் வாக்காளர்களை நீக்கியவர்கள். அடுத்து தமிழ்நாட்டிற்குள் நுழைய முயல்கின்றனர். ஆனால், அவர்களின் திட்டம் இங்கு நடக்காது.
ஏனென்றால், இங்குள்ள ஒவ்வொருவரும் கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள். வரும் 2026-ம் வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களித்தால் மக்களை மட்டுமல்ல, கல்வியையும் காப்பாற்ற முடியாது.
இந்திய அளவில் உள்ள முதல் 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு முன்னால் நிற்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்ளையால் புதிய ஆபத்து இந்தி திணிப்பு.
கடந்த, 1938-ல் தொடங்கிய மொழிப்போராட்டம் இன்றளவும் தொடர்கிறது. அதனால்தான், நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கையை அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையாக நடந்தது.
ஆனால், பா.ஜ.க அரசு கடந்த 2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்யவில்லை. இதனால், தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க நினைக்கிறார்கள். அதை நடக்கவிடமாட்டோம்.
அதேபோல், கடந்த 1989-ம் ஆண்டு விவசாயிகளுக்கு 13 லட்சம் இலவச மின்சாரம் இணைப்பு தந்தார் கலைஞர். இப்போது, தி.மு.க ஆட்சியில் 1.75 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உரிமை தொகை 1.15 கோடி பேருக்குக் கொடுக்கும் அரசு மாணவர்களுக்கு உயர்கல்விக்கும் உதவுகிறது. அன்புக்கரங்கள் திட்டம் தொடக்க விழாவில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் கண்ணீரோடுதான் இருந்தார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைக்கத்தான் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்” என்றார்.