
சென்னை: ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை 6-வது ஆண்டாக நனவாக்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 632 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தமிழகத்தில் ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். குறிப்பாக, 2014-15-ம் ஆண்டில் 38 பேரும், 2015-16-ம் ஆண்டில் 36 பேரும், 2016-17-ம் ஆண்டில் 34 அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.