
கரூரில் கடந்த 9 – ம் தேதி தாந்தோன்றிமலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காண்டீபன் (வயது 52) என்பவர் ரூ.500 கொடுத்து மதுபானம் வாங்கியபோது மேற்படி கடையில் இருந்த மேற்பார்வையாளர் வேணுவிஜய் என்பவர் காண்டீபன் கொடுத்த ரூ. 500 கள்ளநோட்டாக இருப்பதை அறிந்தார்.
இதனால், சந்தேகத்தின்பேரில் தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு சென்று கொடுத்த புகாரின் பேரில் தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, காண்டீபனைக் கைது செய்தனர். அதோடு, அவரிடமிருந்து 21 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 10,500) பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கரூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்தக் கள்ளநோட்டு வழக்கு சம்பந்தமாக மத்திய மண்டலா காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவுப்படி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையில், கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், பசுபதிபாளையம் வட்ட ஆய்வாளர் சதீஸ்குமார் மற்றும் வாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் சையது அலி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளி காண்டீபன் கொடுத்த தகவலின் பேரில், இந்த கள்ளநோட்டு வழக்கில் தொடர்புடையவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக திருச்சியில் உள்ள ராஜேந்திரன் (வயது 44) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து இரண்டு ரூ. 500 கள்ளநோட்டுகளை (ரூ. 1,000) பறிமுதல் செய்தனர். அதோடு, அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சென்னையில் வசித்து வந்த சேலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 48) என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து கள்ள நோட்டு தயாரிக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் 20 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் (ரூ. 10,000) ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், இவ்வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரைக் கைது செய்ய தனிப்படையினர் கேரளா மற்றும் ஆந்திரபிரதேசம் மாநிலங்கள் சென்றனர். கேரளாவைச் சேர்ந்த சானு சானு (வயது 44), ஆந்திராவைச் சேர்ந்த அர்ஜுன் (எ) விஜயகுமார் ஆகியோரைக் கைது செய்தனர். அதோடு, சானுவிடம் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளைக் கைப்பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர். அதோடு, விசாரணை முடிவில் மேலும் பலரைக் கைது செய்ய வாய்ப்புள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கள்ளநோட்டு வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கள்ள நோட்டு மற்றும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படும் இயந்திரம், உபகரணங்களை கைப்பற்றிய கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினரை, கரூர் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா பாராட்டினார். கள்ள நோட்டு தயாரித்த கும்பலை கரூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.