
இந்திய திரையுலகிற்குப் பெருமைசேர்க்கும் வகையில், ‘Homebound’ திரைப்படம் 2026 ஆஸ்கர் விருதுக்கு ‘சிறந்த சர்வதேச திரைப்படம்’ பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
நீரஜ் கய்வான் இயக்கிய இந்தப் படம், கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். ஈஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Homebound முதன்முதலில் இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவின் “Un Certain Regard” பிரிவில் திரையிடப்பட்டது.
அதன் பின் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றிருந்தது.
சர்வதேச அளவில் பெற்ற இந்த அங்கீகாரம், படத்தை இந்தியாவின் ஆஸ்கர் தேர்வுக்கான வலுவான படைப்பாக உயர்த்தியது.
இந்த வெற்றியைப் பற்றி கரண் ஜோஹர் மிகுந்த பெருமிதத்துடன், “HOMEBOUND திரைப்படம் இந்தியாவின் அதிகாரபூர்வ ஆஸ்கர் என்ட்ரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதே எங்களுக்குப் பெரும் கௌரவம்.
நீரஜ் கவ்வானின் உழைப்பும் அன்பும் நிறைந்த இந்தப் படைப்பு உலகம் முழுவதும் பல இதயங்களில் இடம்பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் நீரஜ் கவ்வான் பேசும்போது, “இந்த படம் நம் நிலம், நம் மக்களிடம் கொண்ட அன்பில் வேரூன்றியிருக்கிறது.
உலகளாவிய மேடையில் இந்தியக் கதைகளை வெளிப்படுத்துவது பெருமையும் பணிவும் தருகிறது. இந்த வாய்ப்பிற்காக நான் மனமார்ந்த நன்றியுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.