• September 21, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கும், த.வெ.கவிற்கு 2 வது இடத்திற்குதான் போட்டி. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமர்வது உறுதி. டிசம்பர் மாதத்திற்குப் பின்பு ஒரு அலை உருவாகும் எடப்பாடி பழனிசாமியின் பின்பு மக்கள் திரள்வார்கள். களத்தில் அ.தி.மு.க-வை எதிர்க்கின்ற சக்தி யாருக்கும் கிடையாது. பிரச்னை என்று சொன்னால் வீதிக்கு வந்து போராடக்கூடிய போர்க்களம் படைத்தவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள். தேர்தல் யுத்தக் களத்தில் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் விதமாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பாதயாத்திரை செல்வதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் இது வரவேற்கத்தக்கது.

ராஜேந்திர பாலாஜி

தி.மு.க செய்யக்கூடிய அனைத்து சதிகளையும் முறியடித்து எடப்பாடி பழனிசாமி துருவ நட்சத்திரமாக அரசியல் வானில் ஜொலிப்பார். தமிழ்நாட்டு மக்கள் விரும்பக்கூடிய நல்லாட்சி தருவார். ஓபிஎஸ், டிடிவி இணைப்பு சம்பந்தமாக எந்த முடிவாக இருந்தாலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார். அதிகாரம் கண்ணை மறைக்கின்ற வார்த்தைகளை விடுகின்ற இன்றைய தி.மு.க தலைவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு பாடமாக, படிப்பினையாக அமையும். விஜயகாந்த் தே.மு.தி.க ஆரம்பிக்கும்போது மதுரையில் அவருக்கு கூடிய கூட்டம் மிகப்பெரிய கூட்டம். விஜயகாந்த்துக்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள் ஆனால் விஜய்க்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இதுவரை உருவாகவில்லை. விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.

விஜய்க்கு கூடும் கூட்டத்தை விட தல அஜித் வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் கூடும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கூடாத கூட்டமா ஏர்போர்ட்டில் வந்து ரஜினி நின்றால் 5 லட்சம் பேர் கூடுவார்கள். ரஜினிக்கு இன்றும் அந்த மாஸ் இருக்கிறது. திரை நட்சத்திரங்கள் நேரில் எப்படி இருக்கிறார்கள் என்று நாங்களே பார்ப்போம். விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் நடைபெறாத ஆசை. அவர் முயற்சி எல்லாம் வீணாகும். அவர் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்றால் எடப்பாடியார் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்தத் தேர்தல் முடிந்தபிறகு த.வெ.க-வை தி.மு.க முடித்து விடும். அதனால் விஜய் நன்றாக யோசித்து அ.தி.மு.க கூட்டணிக்கு வரவேண்டும்.

ராஜேந்திர பாலாஜி

விஜய் தி.மு.கவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், தி.மு.க ஆட்சியைத் தூக்கி எறிவேன் என்று விஜய் சொல்வது உண்மையாக இருந்தால் அவர் அ.தி.மு.க கூட்டணியைத்தான் நாடி வரவேண்டும் அதுதான் விஜய்க்கு சரியான முடிவு. விஜய் தனித்து நின்று களம் காண்போம் என்று கூறுவது திமுகவிற்கு வலுசேர்க்கும் விதமாகத்தான் தமிழக மக்கள் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் தி.மு.க-விற்கு மாற்றாக அ.தி.மு.க-வை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஸ்டாலினுக்கு மாற்றாக எடப்பாடி பழனிசாமியை தான் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள். இது தான் தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடக்கும்.” என்றார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *