• September 21, 2025
  • NewsEditor
  • 0

திமுக, தங்களுக்கு வேண்டுமென்றால் பாஜகவிற்கு வெண்குடை பிடிப்பார்கள், வேண்டாம் என்றால் கருப்பு பலூன் விடுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோயிலில் அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வருவதற்காக மக்களின் ஆசையைத் தூண்டும் விதமாக நிறைவேற்ற முடியாத 525 வாக்குறுதிகளை திமுக அளித்தது. தற்போது ஆட்சி நிறைவு பெறும் தறுவாயில் அதில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றவில்லை.

மதுரைக்கு எந்த வளர்ச்சி திட்டங்களையும் செய்யவில்லை. அறிவித்த மெட்ரோ ரயில் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அனுமதி பெறப்பட்ட மதுரை விமான நிலைய அண்டர் பாஸ் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளனர்.

இன்றைக்கு பவளவிழா காணும் திமுகதான் பாஜக-வைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என்று ஸ்டாலின் கூறுகிறார். தமிழகத்தின் உண்மையான நிலவரத்தை திமுக அரசு மறைத்து வருகிறது. இதே ஸ்டாலின், தன் தந்தையின் நாணய வெளியிட்டு விழாவை மத்திய அமைச்சர் மூலம் வெளியிட வைத்தார், அதேபோல கேலோ விளையாட்டு விழாவை பிரதமரை அழைத்து நடத்தினார்.

திமுகவிற்குத் தேவை என்றால் பிரதமருக்கு வெண்குடை பிடிப்பதும், தேவை இல்லை என்றால் கருப்பு பலூன் பறக்க விடுவதும் வழக்கமான ஒன்றுதான். தமிழக மக்களின் முதுகெலும்பை உடைத்து விட்டு, தலைகுனிய விடமாட்டேன் என்று சொல்வது சரிதானா?

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களைப் பெற்றுத் தந்தார். அதிமுகவும், பாஜகவும் ராமன் லட்சுமணன் போல சகோதர உறவுடன் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தனது மதி நுட்பத்தால் பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்குப் பெற்றுத் தந்தார். தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழகத்திற்குச் சல்லி பைசா கூடப் பெறவில்லை. மத்திய அரசுடன் இணைந்து திமுக தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, மக்களிடம் பொய் சொல்வதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லவராக உள்ளார்.

75-வது பவள ஆண்டைக் கொண்டாடும் திமுக, மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களைக் கொண்டு வர முடியவில்லை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று கூறிவிட்டு இந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி உள்ளார்கள்? தன் பையனுக்கு மட்டும் துணை முதலமைச்சர் என்ற வேலைவாய்ப்பைக் கொடுத்துவிட்டு தமிழக இளைஞர்களுக்கு நோ வேகன்சியைக் கொடுத்துவிட்டார் .

மதுரையில் கனிமவள சுரண்டல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன.

விஜய்
விஜய்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மக்களிடம் ஆதரவைக் கேட்கலாம், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்குப் பல தியாக வரலாறு உள்ளது. அதனால்தான் அதிமுகவிற்கு நிரந்தர வாக்கு வங்கி உள்ளது.

விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என்கிறார். முதலில் பரீட்சை எழுதட்டும், பாஸ் ஆவாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அரசியல் களத்தில் விஜய் தற்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறார். திமுக-விற்கும், தவெக-விற்கும் போட்டியென விஜய் அறியாமல் தெரியாமல் பேசுகிறார்.

தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு மாற்று அதிமுக, அதிமுகவிற்கு மாற்று திமுக என்பது காலம் காலமாக உள்ள வரலாறு. திமுகவின் 75 ஆண்டுக்கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் உண்மை தெரியும்.

அதிமுக மட்டுமே திமுகவை வீழ்த்தும் சக்தியாக உள்ளது. விஜய் பேசுவதில் தவறில்லை, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேசலாம். எம்ஜிஆரைப் பற்றிப் பேசாமல் யாரும் பொது வாழ்க்கைக்கு வர முடியாது. இயக்கமும் தொடங்க முடியாது.

அதிமுக-பாஜக கூட்டணியில் டெல்லியில் எடுக்க வேண்டிய முடிவுகளை அமித்ஷா எடுப்பார். தமிழகத்தில் எடுக்க வேண்டிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் என்ன பேசினார் என்பதை ஊடகத்திற்கு மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். அமித்ஷா பேசியது எடப்பாடியாருக்கும் ஆண்டவனுக்கும்தான் தெரியும்.

முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கடை திறப்பு விழாவின்போது கூட்டம் கூடுகிறது. நடிகர் தனுஷ் கலந்துகொண்ட விழாவில் கூட்டம் அதிக அளவில் கூடியதை காவல்துறை கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

இன்றைக்கு திமுகவிற்கு எதிர்ப்பு 65 சதவிகிதம், ஆதரவு 35 சதவிகிதம் உள்ளது. ஆகவே இன்றைக்கு திமுகவை எதிர்க்கும் புனிதப் பணியில் எடப்பாடி பழனிசாமி உள்ளார், இதற்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *