• September 21, 2025
  • NewsEditor
  • 0

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சென்னையிலிருந்து கொச்சிக்கு வந்தார் மோகன்லால். தனக்கு விருது அறிவிக்கப்பட்டதை கேக் வெட்டி கொண்டாடினார் மோகன்லாலுக்கு பலரும் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மோகன்லால் கூறுகையில், “என்மீது அன்பு வைத்து வரவேற்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சினிமாவில் மிகப்பெரிய விருது எனக்குக் கிடைத்திருக்கிறது. 48 வருட என்னுடைய சினிமா வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய விருதாக இதை நான் பார்க்கிறேன். அதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னை உருவாக்கிய மலையாள சினிமாவுக்கும். என்னுடன் பணிபுரிந்த, பணிபுரிந்துகொண்டிருக்கிற, இனி பணிபுரியப் போகின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருதை மலையாள சினிமாவுக்கு சமர்ப்பிக்கின்றேன். விருது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு போனில் தகவல் தெரிவித்தார்கள். முதலில் என்னால் நம்பமுடியவில்லை. கடந்தவைகளைப்பற்றியும், வரப்போவது குறித்தும் நான் சிந்திப்பதில்லை. நிகழ்காலத்தை பற்றி மட்டுமே சிந்திகின்றேன்.

பிரதமர் மோடியுடன் மோகன்லால்

மிகப்பெரிய ஜாம்பவான்கள் நடந்துசென்ற வழியில் நானும் பயணிக்கிறேன். சிறப்பு மிக்க இந்த விருது, இதற்கு முன்பு மிகப்பெரிய செலிபிரிட்டிகளுக்கு கிடைத்திருக்கிறது. அதில் நானும் இடம்பெற்றதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஈஸ்வரனுக்கும், என் குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும், என்னை விரும்பும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருது மலையாள சினிமாவுக்கு கிடைத்ததாகும்.

  48 ஆண்டுகளாக எனக்கு உதவிய பலரும் இன்று இல்லை. நான் அவர்களை நினைத்துப்பார்க்கிறேன். இயக்குநர்கள், ஸ்கிரிப்ட் ரைட்டர்ஸ், ஆர்ட்டிஸ்டுகள், யூனிட் பாய்ஸ், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் எனை அனைவரும் சேர்ந்துதான் மோகன்லால் என்ற நடிகர் உருவாகினார். என் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

Mohanlal - மோகன்லால்
Mohanlal – மோகன்லால்

இந்திய சினிமாவில் மிகப்பெரிய விருது மலையாள சினிமாவுக்கு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. தேசிய விருது போன்ற நிறைய விருதுகள் எனக்கு கிடைத்துள்ளன. தாதா சாகேப் பால்கே மலையாள சினிமாவுக்கு கிடைக்கும் இரண்டாவது விருது என்பதில் தனி சிறப்பு உண்டு. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஈஸ்வரனுக்கும், ரசிகர்களுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 48 ஆண்டுகளாக நான் இருக்கும் சினிமா துறையை ஈஸ்வரனாக பார்க்கிறேன். அதில் எனது செயல்பாடு பிரார்த்தனைபோன்றது. அதனால்தான் நான் ஈஸ்வரன் தந்த அவார்டு என குறிப்பிட்டுச் சொல்கிறேன்” என்றார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திருஷ்யம் -3 சினிமா படபிடிப்பு நாளை தொடங்க உள்ளதாகவும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மோகன்லால் தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *