
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி அதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூரில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: டிஎன்பிஎஸ்சி சார்பில் 3,937 காலி பணியிடங்கலுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு 15.52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
கேள்விகள் ஆங்கில வழியில் எளிமையாகவும், தமிழ் வழியில் கடினமாகவும் இருந்தன. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும் என அறிவித்துவிட்டு, மற்ற பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்?. இந்த முறைகேட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது?. அதே வேளையில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை.