
நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இந்த நவராத்திரி விழாவில் தாண்டியா நடனம் மிகவும் பிரபலம் ஆகும். வட இந்தியாவில் இந்த நடனம் மிகவும் பிரபலம் என்றாலும் தமிழ் நாட்டிலும் வட இந்தியர்கள் இந்த நடனத்தை 9 நாட்களும் ஆடுகின்றனர்.
மும்பையில் இந்த நடனத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் அதிக அளவில் பங்கேற்பது வழக்கம். இந்த தாண்டியா நடனத்தில் பங்கேற்பவர்களுக்கு விஷ்வ இந்து பரிஷத் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.
இது குறித்து அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் அளித்த பேட்டியில், ”தாண்டியா நடனம் என்பது வெறும் நடனம் மட்டுமல்ல, தெய்வத்தை மகிழ்விப்பதற்கான ஒரு வழிபாட்டு முறை.
அவர்கள் (முஸ்லிம்கள்) சிலை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே தாண்டியா நடனத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.
தாண்டியா நடனத்தில் பங்கேற்பவர்கள் நெற்றியில் திலகம் இட்டு இருக்கவேண்டும். புனித கயிறு கட்டி இருக்கவேண்டும். இந்து கடவுள்களை வழிபட்டுவிட்டுத்தான் நடனத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். நடனத்தில் பங்கேற்பவர்கள் மீது கோமியம் தெளிக்கப்படும்.
இந்த விதிகள் நவராத்திரி விழாக்களில் பின்பற்றப்படுகிறதா என்பதை விஷ்வ இந்து பரிஷ்த் மற்றும் பஜ்ரங் தள தொண்டர்கள் கண்காணிக்கவேண்டும். இதில் இந்துக்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது போன்ற நிபந்தனைகளை விதித்து சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த வி.எச்.பி முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
நவராத்திரி மண்டல்கள் தாண்டியா நடனத்தில் யார் பங்கேற்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”ஒவ்வொரு தாண்டியா குழுவும் சில விதிகளை தங்களுக்குள் உருவாக்கி இருக்கின்றன. அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு” என்று கூறினார்.

இது குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில், ”ஒரு வகுப்புவாத சூழலை உருவாக்குவதுதான் அவர்களின் வேலை. நான் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை பற்றிப் பேசவில்லை, ஆனால் இந்த விஷம் பரப்பப்படும் விதம் மகாராஷ்டிராவுக்கோ அல்லது நாட்டிற்கோ ஏற்புடையதல்ல” என்று அவர் கூறினார்.
பா.ஜ.க மற்றும் அதன் கிளை அமைப்புகள் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.