• September 20, 2025
  • NewsEditor
  • 0

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வழங்கப்பட உள்ளது. அன்று நடைபெறும் 71 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மோகன்லாலின் சினிமா பயணம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பாராட்டியுள்ளது.  மலையாள சினிமாவை பொறுத்தமட்டில் ஏற்கனவே அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு 2004-ல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் பாபா சாகேப் பால்கே விருதுபெறும் இரண்டாவது நபர் மோகன்லால் ஆவர். பாபா சாகேப் விருதுபெறும் நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “மலையாள சினிமாக்களிலும் நாடகங்களிலும் பல தசாப்தங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மோகன்லால். மலையாள சினிமாவை வழி நடத்தும் ஒளி அவர்தான். தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி சினிமாக்களிலும் மோகன்லால் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்துள்ளார். பாபா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு வாழ்த்துகள். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கட்டும்” என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி பினராயி விஜயன் கூறுகையில்,”சினிமா துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கு நாடு வழங்கும் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றதற்கு அன்பிற்குரிய மோகன் லாலுக்கு வாழ்த்துகள். இது மலையாள திரை உலகிற்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சாதனையாகும். அவரது ஒப்பற்ற கலை வாழ்க்கைக்கு இது ஒரு தகுதியான அங்கீகாரம் ஆகும். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் மோகன்லால்

இதுபற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், “மலையாளத்தின் பெருமைமிகு மோகன்லாலுக்கு இந்திய சினிமா துறையில் மிக உயரிய வெகுமதியாக இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. இயல்பான மற்றும் தனித்துவமான நடிப்பு மூலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள மக்களையும், இந்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்திய நடிகர் அவர். தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த நடிகர் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெறுவது ஒவ்வொரு மலையாள மக்களுக்கும் கிடைக்கும் அங்கீகாரம் ஆகும். வயதுகளை கடந்து, நாடுகளை கடந்து அனைவரின் லாலேட்டனான அன்பான மோகன்லாலுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *