
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பானிபூரி கேட்டு அடம்பிடித்து நடுரோட்டில் அமர்ந்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊர்வலம், அரசியல் பேரணி, அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக போக்குவரத்து தடைபடுவது வாடிக்கை. ஆனால், குஜராத்தில் பெண் ஒருவர் பானிபூரி தரக்கோரி நடுரோட்டில் தர்ணா செய்த விநோத சம்பவம் நடந்தேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, ரூ.20 கொடுத்து கடைக்காரரிடம் பானிபூரி கேட்டுள்ளார். அந்தப் பெண் எதிர்பார்த்ததோ ஆறு. ஆனால், கடைக்காரர் கொடுத்ததோ நான்கு.. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்தப் பெண் இரண்டு பானிபூரிக்கு நீதி கேட்டு நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.