• September 20, 2025
  • NewsEditor
  • 0

ஒரு காலத்தில் ‘வேலை கிடைக்குமா?’ என்பதுதான் மக்களின் கவலையாக இருந்தது. ஆனால், இன்றைக்குக் கிடைத்த வேலையைக் காப்பாற்றிக்கொள்வதே பெரும் கவலையாகிவிட்டது. ஏனெனில், ‘வேலை எப்போது பறிபோகுமோ?’ என்ற சூழல்தான் பல துறைகளிலும் உள்ளது. 2024-ல் மட்டும் இந்தியாவில் சுமார் 90,000 பேர் ஐ.டி துறையில் தங்களின் வேலையை இழந்துள்ளனர். மேலும், கடந்த மூன்று ஆண்டு களில் மட்டும் ஐ.டி துறையில் வேலை இழந்தோர் எண்ணிக்கை 2.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, TCS, Infosys, Wipro போன்ற முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பணி நீக்கம் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதுபோன்ற நிச்சயமற்ற சூழல்களில், நாம் எதற்கும் தயாராக இருப்பது மிகவும் முக்கியம். வேலை இழப்பு போன்ற நிலையைச் சமாளிக்கவும், தொடர்ந்து அடுத்தகட்ட முயற்சிகளை நம்பிக்கையுடன் எடுக்கவும் நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் நிதி ஆலோசகர் விஷ்ணுவர்தன்.

“இன்றைய சூழலில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், வேலையில் நிலைத்தன்மை என்பது குறைந்துகொண்டே வருகிறது. ‘நீங்கள் வீட்டுக்குப் போகலாம். நாளை முதல் நீங்கள் அலுவலகம் வர வேண்டியதில்லை’ என எப்போது வேண்டுமானாலும் மெயில் வரலாம். இல்லையென்றால், ‘கம்பெனி மூடப்படுகிறது’ என்ற அறிவிப்பு வரலாம். அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.

இது போன்ற சமயங்களில் நாம் நிதி ரீதியாகத் தயாராக இருந்தால் எளிதில் சமாளிக்கவும், பணச் சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளவும் முடியும். அதற்கு, முதலில் அவசரகால நிதியை உருவாக்க வேண்டும். இது குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்க வேண்டும். இதற்கு சரியான திட்டமிடல் முக்கியம். வீட்டு வாடகை, இ.எம்.ஐ, குழந்தைகளின் கல்விக் கட்டணம், மருத்துவச் செலவுகள் போன்ற எந்தச் செலவுகளையும் நம்மால் தவிர்க்க முடியாது. அதனால், அவசரகால நிதியை அதற்கெல்லாம் ஏற்றது போல தயார் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல், எப்போதும் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதும், சேமித்து, முதலீடுகளைச் செய்வதும் அவசியம்.

மேலும், வருங்கால நிதி நலனுக்காக வேலையில் சேர்ந்தது முதலே, மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக உங்களால் முடிந்த அளவு வரை எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இது உங்களுக்கு நிதி ஒழுங்கையும், நீண்டகால நம்பிக்கையையும் தரும்.

மேலும், அனைவருமே மருத்துவக் காப்பீடு அவசியம் எடுத்திருக்க வேண்டும். அதுதான் எதிர்பாராத சமயங்களில் கைகொடுக்கும். நிதிச் சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவும். குடும்பச் செலவுகளைச் சீராக்கி, தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒருவேளை பணி இழப்பு நீடித்தால், மீதமுள்ள முதலீடுகளைப் பயன்படுத்தி அதற்கேற்ப வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும்.

வேலை போன பிறகு, அடுத்த வேலையைத் தேடும் முயற்சியை எடுக்க வேண்டும். புதிய வேலை கிடைக்காத காலத்தில், தற்காலிக வருமான வாய்ப்புகளை முயற்சி செய்யலாம். இன்று அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. உங்களிடம் உள்ள திறன்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, ஆன்லைன் மூலமான பகுதி நேர வேலைகள் செய்வது, இ-காமர்ஸ், டாக்ஸி ஓட்டுவது போன்ற வேலைகளைச் செய்வது தற்காலிக மாகப் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும்.

விஷ்ணுவர்தன்

வேலை என்பது, நம் உழைப்பின் மூலம் வருமானம் ஈட்டும் ஒரு வழி. ஆனால், நிதித் திட்டமிடல் என்பது ஒரு வாழ்க்கை முறை. வருமானம் வரும்போதே, அதைத் திட்டமிட்டு சீராகச் சேமிக்க ஆரம்பித்தால், வேலை போனாலும் நம் வாழ்க்கை சிக்கலில்லாமல் செல்லும். மேலும், நீண்டகாலத்துக்கு நாம் முதலீடு செய்து வரும்போது பெரும் செல்வத்தையும் சேர்க்க முடியும். அதன் பலனாக நமக்குப் பணக் கஷ்டம் இல்லாத நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கும்.

வேலை எப்போது போகும், புதிய வேலை எப்போது கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், நம் வாழ்க்கையின் நிதி நிலைமைக்கு நாம்தான் முழுப் பொறுப்பு. அதை வளமாக வைத்திருப்பது நம் கையில்தான் உள்ளது. எனவே, வேலையும் வருமானமும் இருக்கும்போதே, திட்டமிட்டுச் சேமிப்பது, முதலீடுகள் செய்து போர்ட்ஃபோலியோவைப் பராமரிப்பது, காப்பீடு மற்றும் அவசரகால நிதியை உறுதி செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இவைதான் எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க நம்மை தயார் செய்யும். சரியான நிதித் திட்டமிடல் இருந்தால் நம் வாழ்க்கை நம் கையில். நம்பிக்கையும் நிம்மதியும் நம்மோடு இருக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *