
சென்னை: மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கும் நிலையில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதற்காக `திஷா' குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (திஷா) குழுவின் 5-வது ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வரவேற்றார். இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மத்திய அரசின் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் 45,312 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.67.97 கோடி, சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.801.62 கோடி, நலிவு நிலைக்குறைப்பு நிதியாக 13,546 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.75.73 கோடி வழங்கப்பட்டுள்ளது.