• September 19, 2025
  • NewsEditor
  • 0

பாலஸ்தீனம் மீது சுமார் இரண்டு ஆண்டுகளாக (2023 அக்டோபர் முதல்) இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 65,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக 19,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். காஸாவில் 90 சதவிகித குடியிருப்புகள் இஸ்ரேலால் நாசமாக்கப்பட்டன.

ஐ.நா முதல் பல சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தும் இஸ்ரேல் இந்த இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தக்கோரி பேரணி நடத்தப்பட்டது.

பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தக்கோரி பேரணி

இந்தப் பேரணியில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் வெற்றிமாறன், அமீர், பிரகாஷ்ராஜ், சத்யராஜ் ஆகிய திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மேடையில் பேசிய சத்யராஜ், “சில கொலைகாரப்பாவிகள் மனிதர்களைக் கொள்வதற்காக விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது. அவர்களுக்கெல்லாம் மனிதாபிமானமே இல்லையா…

பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தக்கோரி பேரணி - பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தக்கோரி பேரணி – பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

ஒவ்வொரு முறையும் ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும்போது இனப்படுகொலை நடக்கிறது. போர் என்ற பெயரில் மொத்த இனத்தையும் அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.

அதற்கு அமெரிக்கா துணைபோகிறது. எங்களின் பிரபலம், மனிதநேயத்துக்காகவும் மனித விடுதலைக்காகவும் பயன்படாவிட்டால் நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருப்பது எதற்கும் பிரயோஜனமில்லை” என்று கூறினார்.

அவரைத்தொடர்ந்து பேசிய பிரகாஷ்ராஜ், “அநியாயத்துக்கு எதிராகப் பேசுவது அரசியல் என்றால், நாங்கள் அரசியல்தான் பேசுவோம்.

ஒரு கவிதை இருக்கிறது, `போர் முடிந்துவிடும். தலைவர்களெல்லாம் கைகுலுக்கிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் அங்கே ஒரு கிழவி தன் மகனுக்காகக் காத்திருப்பாள். ஒரு பெண் தன் கணவனுக்காகக் காத்திருப்பாள்.

குழந்தைகள் தன் அப்பாவுக்காகக் காத்திருப்பார்கள். இந்த நாட்டை இந்த மண்ணை விற்றது யாரென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், அதை விலைகொடுத்தது யாரென்று எங்களுக்குத் தெரியும்’.

பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தக்கோரி பேரணி
பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தக்கோரி பேரணி

நாங்கள் மௌனமாக இருந்தால் இதுதான் நடக்கும். கலைஞர்கள் ஏன் இதை பேசுகிறார்கள் என்று கேட்கிறவர்களுக்கும் ஒரு கவிஞன், “என் கவிதையில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும்.

பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும் என்றால் யுத்த விமானங்களின் சத்தம் அடங்க வேண்டும்” என்கிறான்.

நம்முடைய தனிப்பட்ட உடம்புக்கு காயமானால், நாம் மௌனமாக இருந்தாலும் குணமாகிவிடும். ஆனால் ஒரு நாட்டுக்கு மனிதநேயத்துக்கு காயம் ஏற்படும்போது நான் மௌனமாக இருந்தால் அது இன்னும் அதிகமாகும்.

சாகுறதுக்கு முன்னாடி சாகக் கூடாது. காஸாவில் நடப்பதற்கு இஸ்ரேல் மட்டும் காரணமல்ல. அதற்குத் துணையாக இருக்கின்ற அமெரிக்காவும் காரணம். அதற்கு மௌனமாக இருக்கின்ற மோடியும் காரணம். அதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதனும் காரணம்” என்று கூறி முடித்தார்.

அதேபோல் அமீர் பேசுகையில், “2023-ல் தொடங்கி இதுவரை 64,000 படுகொலையை நடத்தியிருக்கின்ற இஸ்ரேல் அரசு, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற அமெரிக்க அரசு, அதனுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கின்ற இந்திய மோடி அரசு ஆகியவற்றை எதிர்த்து இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இப்படி ஒரு கூட்டம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை, இதுதான் தமிழ்நாடு. இந்த மேடையில் இருப்பவர்களின் பேச்சு இந்திய உளவுத்துறைக்குப் போய் சேரும், காஸாவுக்கும் போய் சேரும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய வெற்றிமாறன், “எங்கெல்லாம் மக்கள் ஒடுக்குமுறையால் கொல்லப்படுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் ஆதரவாக நிற்பதுதான் ஒரு கலைஞாக, மனிதனாக நம் எல்லோருடைய பொறுப்பு.

பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தக்கோரி பேரணி
பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தக்கோரி பேரணி

பாலஸ்தீனத்தில் நூற்றாண்டு கால திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. பொதுமக்களும், குழந்தைகளும் மருத்துவமனைகளில், பள்ளிகளில் அடைக்கலமாக இருக்கிறார்கள் என்று தெரிந்து குண்டுகளை வீசுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான வருடங்களாக அவர்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஆலிவ் மரங்களை நூற்றுக்கணக்கான ஏக்கரில் அழிக்கிறார்கள். இன்று காஸா பஞ்சப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தில் ஒருவர் பசியால் இறப்பதும், ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறப்பதும்தான் பஞ்சம்.

எல்லா உதவிகளும் வெளியே இருக்கிறது. ஆனால், காஸாவுக்குள் அனுப்ப முடியவில்லை.

இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையைக் கண்டிப்பது நம் எல்லோருடைய கடமை. மாற்றம் ஒரே நேரத்தில் நடந்திடாது. ஆனால், நம் எதிர்ப்பை பதிவு செய்வது நமது கடமை” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *