
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
சென்னையில் நான் 57 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். என் பெற்றோர் முதன்முதலில் 1967 ல் சென்னை (அன்றைய மெட்ராஸ்) தாம்பரத்தில் குடியேறினார்கள். நான் 1968 ல் பிறந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை சென்னையும் அதன் சுற்றுவட்டாரங்களுமே எங்கள் வாழ்வியலில் முக்கிய அங்கம் வகித்தன, வகிக்கின்றன.
சென்னை புறநகர் தாம்பரத்தின் முகவரியில் சென்னை பின்கோடு தான் இருக்கும். ஆனாலும் அங்கு வசிக்கும் மக்கள் கிண்டியைத்தாண்டி பயணம் செய்தால் மெட்ராஸ் போகிறேன் என்றுதான் சொல்வார்கள். அப்படி நாங்கள் அடிக்கடி நிறைய விஷயங்களுக்காக மெட்ராஸ் போகத்தான் வேண்டியிருந்தது.
நான் சிறுவனாக இருக்கும்போது இப்போது போல் சென்னை புறநகரில் கடைகள் அதிகம் இருக்காது. அத்தியாவசியமான பொருட்கள் விற்கும் கடைகள் மட்டுமே இருக்கும். உடைகள், காலணிகள், விளையாட்டுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கடைகள் ஆகியவை மிகவும் குறைவு. ஆகவே மூர் மார்க்கெட் சென்றால் எல்லாம் கிடைக்கும் என்று அங்கு தேவையானபோது செல்வோம்.
மூர் மார்க்கெட் என்பது இப்போதைய சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தின் அருகில் இருந்த மிகப்பெரிய வணிக சந்தை. மூர் மார்க்கெட்டில் அப்பா அம்மாவைத் தவிர எல்லாம் கிடைக்கும் என்று அக்காலத்தில் சொல்வார்கள். அங்கு மிகவும் குறைவான விலையில் எல்லா பொருட்களும் கிடைத்தன. பிற்காலத்தில் ஒரு தீ விபத்தில் மூர் மார்க்கெட் எரிந்து சாம்பலானது வரலாறு!
ஒரு முறை (1980 என்று ஞாபகம்) மூர் மார்க்கெட்டிலிருந்து கேரம் போர்டு, செஸ் போர்டு முதலானவற்றை அப்பாவுடன் சென்று வாங்கி வந்தது நினைவுகளில் பசுமையாக நிறைந்துள்ளது.
மெட்ராஸின் அடுத்த பெரும் வியாபார சந்தை பாரிமுனை! இன்றும் பாரிமுனை பல மடங்கு பெரிதாகி வளர்ந்திருப்பது மகிழ்ச்சி. புத்தகங்கள், துணிமணிகள், பூக்கள் என இங்கே வந்து பல முறை பொருட்கள் வாங்கிய அனுபவம் எனக்கு ஏராளமாய் உள்ளது. இப்போதும் பாரிமுனைக்குச்சென்று அவ்வப்போது பொருட்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.
அக்காலத்திலிருந்தே பெரிய, சிறிய துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் எல்லாம் ஒருசேர அமைந்திருந்த இடம் சென்னை தி.நகர் மட்டுமே. தீபாவளி, பொங்கலுக்கு துணி எடுக்க தி.நகர் போக வேண்டும் என்பது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. குடும்பத்தோடு சென்று தி.நகரில் பல கடைகள் ஏறி இறங்கி துணி வாங்குவதில் மகிழ்ச்சி பொங்கும்.
இப்போதும் தி.நகரில் கூட்டம் அலை மோதிக்கொண்டு தான் இருக்கிறது. திருமணம் மற்றும் பல விழாக்களுக்கும் தி.நகரில் அமைந்துள்ள கடைகளே துணி, நகை வாங்க எங்களின் தேர்வாக உள்ளன.
இப்போது சென்னை வேகமாக விரிவடைந்து குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளிலும் எல்லா பெரிய கடைகளும் வந்து விட்டன.
அக்கால மெட்ராஸ் நகரத்தின் போக்குவரத்துக்கு மிகவும் சிறந்தவை புறநகர் மின்சார ரயில்கள். முக்கியமாக எங்கள் ஏரியாவில் இருந்து தி.நகர்(மாம்பலம்), எழும்பூர், பூங்கா, கோட்டை என பல ரயில் நிலையங்களில் அடிக்கடி நாங்கள் ஏறி இறங்கியிருக்கிறோம்.
மீட்டர் கேஜ் மின்சார இரயில்கள் அப்போதெல்லாம் பலருக்கும் சிறந்த அனுபவத்தை தந்தன. நான் கல்லூரியில் பயிலும் போதும், ஏன் இப்போதும் (இப்போது அகல ரயில் பாதை) கூட சென்னை மின்சார ரயிலே வாழ்க்கையில் ஓர் முக்கிய அங்கம் வகிக்கிறது.
மற்றொரு முக்கிய போக்குவரத்து அடையாளமாக அப்போதைய பல்லவன் போக்குவரத்துக்கழகத்தின் சிகப்பு நிறப்பேருந்துகள் இருந்தன. அந்தப்பேருந்துகளில் பயணம் செய்வதும் அப்போதெல்லாம் சுகமான அனுபவமாக இருந்தது.
அப்போதெல்லாம் ஆட்டோ கிடையாது. ரயிலடி, பேருந்து நிறுத்தங்களில் மட்டும் ரிக்ஷா ஸ்டாண்ட் இருக்கும். ரிக்ஷா ஓட்டுநர்கள்தான் அப்போதைய ஆபத்பாந்தவர்கள். அவசரத்திற்கு அவர்கள்தான் ரிக்ஷாவில் அழைத்துச்சென்று உதவுவார்கள். ரிக்ஷா மிதிப்பது மிகவும் கடினமான செயலாக இருந்தாலும் அவர்கள் தங்கள் சேவைக்குப் பெரிதாக கட்டணமெல்லாம் வசூலித்ததில்லை.
முக்கியமாக இப்போது இருப்பது போல் 80 களில் போக்குவரத்து நெரிசல் சென்னையில் கிடையாது. கார், பைக் போன்ற வாகனங்கள் மிகமிகக் குறைவு. சைக்கிள் மட்டுமே தெருக்களில் அதிகமாக இருக்கும். பல நேரம் மாட்டு வண்டிகள் தெருக்களில் சென்றதையும் கண்டிருக்கிறேன். காய்கறி, மளிகை சாமான்கள் போன்ற பொருட்கள் வாங்க வெகு தூரம் நடந்து சென்றிருக்கிறோம்.

தாம்பரத்தில் நாங்கள் மளிகைப் பொருட்கள் வாங்கும் மளிகைக் கடைக்காரர் நான் சென்றவுடன் முதலில் என் அப்பா, அம்மா, தாத்தா என எல்லோரையும் விசாரித்த பின்பே என் கையில் இருக்கும் மளிகை லிஸ்டை வாங்குவார். அதே போல் அக்காலத்தில் பிரபலமான கோலி சோடாவை வாங்குவதற்கு நான் செல்லும்போது அந்தப் பெட்டிக்கடைக்காரர் வீட்டில் எல்லோரையும் விசாரிப்பார்.
இத்தனைக்கும் எல்லோரும் அடிக்கடி சந்தித்துக்கொள்பவர்கள்தான். எனினும் மெட்ராஸ் மனிதர்களிடையே வெறும் வியாபாரம் மட்டுமே அன்றி அதையும் தாண்டிய அன்பும் பண்பும் நட்பும் நிறைந்திருந்தது கண்கூடான உண்மை.
இப்போது சென்னையின் மாபெரும் வளர்ச்சியில் மெட்ரோ ரயில்கள், ஆட்டோ, டாக்ஸி சேவைகள், வந்தே பாரத் ரயில்கள் என மிகவும் சுலபமாக பயணிக்க முடிகிறது. இப்போது சென்னையில் ஏ.சி பேருந்துகள், டபுள் டெக்கர், பேட்டரி பேருந்துகள் என விதம் விதமாக அரசுப் பேருந்துகள் கலக்குகின்றன.
சென்னைக்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கோலிவுட் என்றழைக்கப்படும் கோடம்பாக்கம் மெட்ராஸில் தான் இருந்தது, இருக்கிறது. அப்போதெல்லாம் தாம்பரம் போன்ற ஏரியாவில் இருந்த தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் உடனே வெளியாகாது.
சில மாதங்கள் கழித்தே வரும். அதற்காகக்காத்திருந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் பின்னர் கமல், ரஜினி படங்கள் பார்த்த அனுபவங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
இப்போது போல் உட்கார்ந்த இடத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதிகளில்லை. நேரில் தியேட்டருக்குச்சென்று கௌண்டர் முன்பு வரிசையில் நிற்க வேண்டும். அதிலும் பால்கனி, பாக்ஸ் போன்றவைகள் அதிக விலையிலிருக்கும். அவற்றிற்கெனத் தனி வரிசை இருக்கும். அதை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே கீழிருக்கும் டிக்கெட்டுகள் அதாவது மிகவும் முன்னால் இல்லாமல் பால்கனிக்கு நேர் கீழே இருக்கும் டிக்கெட்டுகளை வாங்குவோம்.
கல்லூரிக்காலங்களில் ஈகா, தேவி, ஆல்பர்ட், உதயம், சத்யம், சங்கம், ராக்ஸி, அபிராமி போன்ற தியேட்டர்களில் நண்பர்களுடன் படம் பார்த்த அனுபவங்களை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. இப்போது இல்லாமல் போன அபிராமி, உதயம், ராக்ஸி போன்ற தியேட்டர்களை நினைத்தால் மனம் வலிப்பது நிஜம்.
80 களில் ராக்ஸி தியேட்டரில் தியாகராஜன் நடித்த “மலையூர் மம்பட்டியான்” படம் 300 நாட்கள் தாண்டி ஓடியதும் பத்மம் தியேட்டரில் ஜாக்கி ஷெரோஃப், மீனாட்சி சேஷாத்ரி நடித்த முதல் படமான “ஹீரோ” என்கிற நேரடி ஹிந்திப் படம் 400 நாட்கள் கடந்து ஓடியதும் அக்கால வேற லெவல் சம்பவங்கள்.
இன்று சென்னையில் மற்றும் புறநகரில் மல்டிப்ளெக்ஸ் என பல தியேட்டர்கள் புதிது புதிதாய் வந்துவிட்டன. டிஜிட்டல் அனுபவத்தோடு சில்லென படம் பார்க்கிறோம்.

அப்போதெல்லாம் இப்போது போல் சென்னையில் உணவகங்கள் அதிகம் கிடையாது. நினைத்த நேரத்தில் உணவகத்துக்குச்சென்றோ ஆர்டர் செய்தோ சாப்பிடும் வசதியெல்லாம் இல்லை. முன்பு சொன்னது போல் ஏதேனும் துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்க அல்லது சினிமா பார்க்க வெளியே செல்லும்போது தி.நகர், எழும்பூர், அண்ணாசாலை முதலான இடங்களில் உள்ள சில உணவகங்களில் மட்டுமே உணவருந்தியுள்ளோம். புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு தாத்தா அழைத்துச் செல்வார். அங்கு பாஸந்தி அருமையாக இருக்கும். இப்படி குறிப்பிட்டு சொல்லும் உணவகங்களுக்கு மட்டுமே எப்போதாவது செல்ல முடியும். மற்றபடி அம்மா மற்றும் பாட்டி சமையல்தான் அப்போதெல்லாம்.
அக்காலங்களிலும் நட்சத்திர உணவகங்கள் சென்னையில் உண்டு. ஆனால் மத்திய வகுப்பைச்சேர்ந்த குடும்பத்தினர் அங்கே செய்வதெல்லாம் அப்போது குதிரைக்கொம்புதான்!
சென்னையில் தள்ளுவண்டிக்கடைகள் அப்போதும் இருந்தன. ஒண்டிக்கட்டையாய் இருந்தவர்கள் குறைந்த செலவில் பசியாற சிறந்த உணவுகள் கிடைத்து வந்தன. தாம்பரம், பாரிமுனை போன்ற பேருந்து நிறுத்தங்களில் இரவு முழுவதும் இந்தக் கடைகள் திறந்திருக்கும்.
பின்னர் பல வருடங்களில் பல முன்னணி உணவகங்கள் தங்கள் கிளைகளை சென்னை முழுவதும் விரிவுபடுத்தி விட்டன. இன்று அது மட்டுமன்றி வீட்டிலிருந்தே செயலியிலும் ஆர்டர் செய்து சாப்பிடலாம். அது மட்டுமின்றி காய்கறி உட்பட எல்லாப்பொருட்களையுமே உட்கார்ந்த இடத்திலேயே வாங்கமுடிகிறது.
கடற்கரை!
சிறு வயது முதல் சென்னை மெரீனா கடற்கரைக்கு அவ்வப்போது சென்றதுண்டு. இப்போதும் குடும்பத்துடன் சந்தோஷமாக நேரம் செலவிட மெரீனாவே சிறந்த இடம். மெரீனா கடற்கரையைப்பற்றி எழுத ஏராளமான விஷயங்கள் உள்ளன. கடற்கரை மட்டுமன்றி அங்கிருக்கும் கடைகள், குதிரை சவாரி, பலூன் சுடுதல், சுண்டல் என அனைத்தும் தருவது சிறந்த அனுபவமே.
சென்னையில் ஏராளமான கோவில்கள் உள்ளன. நான் அடிக்கடி திருநீர்மலை இரங்கநாதப்பெருமாள் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோவில் மற்றும் வடபழனி முருகன் கோவில் என சென்று வருவதுண்டு. இங்கெல்லாம் சென்று வேண்டுதல் வைத்து விட்டு வந்த அனுபவங்களை பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.
அந்தக்காலத்தில் யாரோ சொல்லி வைத்த “யாராயிருந்தாலும் மெட்ராஸ் போனா பிழைச்சிக்கலாம்” என்ற கூற்று இன்று வரை நிஜமான தொடர்கதையாக நீள்கிறது.

சென்னையிலும் எல்லாரையும் போல் எனக்கும் கசப்பான அனுபவங்கள் ஏராளம் உண்டு. அவைகளில் ஏமாற்றம், தோல்வி, துரோகம் என இதே சென்னை மனிதர்கள் சிலரால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் அடங்கும். சென்னையிலும் மோசமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த சென்னையை குறை சொல்ல முடியாது. இதுவரை சென்னை வாழ்க்கை எனக்கு வெறுத்துப்போகவில்லை, இனியும் வெறுத்துப் போகாது.
பெரும்பாலும் சென்னையில் வாழ்வை வெற்றிகரமாக நகர்த்த நல்ல மனிதர்களும் நல்ல அனுபவங்களுமே கைகொடுத்துள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டில் பெரு வெள்ளம் வந்தபோது சென்னை மக்கள் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற வேறுபாடுகளின்றி மனித நேயத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய விதத்தை உலகமே வியந்து பாராட்டியது. அதன் பின்னரும் வந்த இயற்கை இடர்பாடுகளிலும் அந்த மனிதநேயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை அசுர வேகத்தில் வளர்ந்து கல்லூரிகள், மருத்துவமனைகள், பல தொழிற்சாலைகள், ஐ.டி, கட்டுமானம் முதலான பல நிறுவனங்கள் என இயங்கி வருகின்றன.
பல இலட்சம் பேர் வெளியூர், வெளிமாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் படிப்பு, வேலை எனத்தங்கியுள்ளார்கள். அவர்களை சென்னையும் சென்னை மக்களும் நல்லபடியாக வாழ வைக்கின்றனர். சென்னைக்கு வந்த பலரும் இங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர். அந்த அளவுக்கு சென்னை அவர்களை ஈர்த்துள்ளது.
எனவே சென்னை வந்தாரை மட்டுமல்ல எல்லோரையும் வாழவைக்கும் என்பது அக்மார்க் நிஜம்!
வாழ்க சென்னை!
வளர்க சென்னை மக்கள்!
………….
புனைப்பெயர்:ரேவதி மகேஷ்
பெயர்: S.மகேஷ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!