• September 19, 2025
  • NewsEditor
  • 0

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஐபோன் 17  (iPhone 17 Pro and Pro Max) இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் ஐபோன் ஷோரூம் மும்பை மற்றும் டெல்லியில் இருக்கிறது. மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அந்த ஷோரூமிற்கு இன்று காலையிலேயே மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் நாட்டின் பல பகுதியில் இருந்து போன் வாங்க ஏராளமானோர் வந்து குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. முதலிலேயே வந்தவர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் தாமதமாக வந்தவர்கள் கூட்டத்தின் முன்னால் அல்லது இடையில் நுழைய முயன்றனர்.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஆப்பிள் ஷோரூமிற்கு வெளியில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஷோரூம் பாதுகாப்புக்கு நின்ற ஒரு சில காவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. காவலர்கள் கையில் கம்புடன் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் ஆப்பிள் ஷோரூமிற்கு வெளியில் போர்க்களம் போன்ற ஒரு சூழல் ஏற்பட்டது.

இது குறித்து சம்பவ இடத்தில் நின்ற மோகன் யாதவ் பேசுகையில், ”நான் அகமதாபாத்தில் இருந்து வந்திருக்கிறேன். காலை 5 மணியில் இருந்து வரிசையில் நிற்கிறேன். ஆனால் அதன் பிறகு வந்தவர்கள் இடையில் புகுந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். போதிய அளவு பாதுகாவலர்களும் கிடையாது. இடையில் புகுந்தவர்களை கட்டுப்படுத்தவும் இல்லை. இதனால் பிரச்னை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

iphone
iphone – ஐபோன்

இரண்டு வரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. டெல்லியில் உள்ள ஆப்பிள் ஷோரூமிலும் இதே போன்று பொதுமக்கள் முதல் நாள் இரவில் இருந்தே புதிய ஐபோன் 17 வாங்க வரிசையில் காத்திருந்தனர். பொதுமக்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஐபோன் 17 சீரிஸின் விலை ₹82,900 முதல் ₹2,29,900 வரை இந்தியாவில் விற்பனையாகிறது. இந்தியாவில் செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்தவர்கள் மற்றும் விற்பனை தொடங்கி இருக்கிறது.

மும்பையில் ஐபோன் 17 வாங்கிய அமன் மேமன் இது குறித்து கூறுகையில், ”நான் எனக்கும் எனது குடும்பத்திற்கும் சேர்த்து 3 போன் வாங்கி இருக்கிறேன். காலை 3 மணியில் இருந்து வரிசையில் காத்திருந்து இதை வாங்கினேன்” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *