
‘நக்சல்கள்’ பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்திய மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். ‘நக்சல்’ இளைஞர்கள் சரணடைந்தால், அரசு அவர்களை மன்னித்து, முறையான ஆயுதப் பயிற்சியளித்து, அரசின் அதிரடிப்படையில் கமாண்டோ வேலைவாய்ப்பு வழங்கும் என்கிற அறிவிப்பை நம்பிச் சென்று, போலி ரெக்ரூட்மெண்ட் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் ஓர் அப்பாவி மலைவாழ் பழங்குடி இளைஞனின் கதையாக ‘தண்டகாரண்யம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் அதியன் ஆதிரை.
இவரது முதல் படமான ‘‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு பெற்ற ஒன்று. ‘லேர்ன் & டீச் புரொடக்‌ஷன் சார்பில் சாய் வெங்கடேஸ்வரனுடன் இணைந்து ‘தண்டகாரண்யம்’ படத்தைத் தயாரித்திருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித்.