
நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு, இவருக்கு மஞ்சள் காமாலை (Jaundice) நோய் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த இவர் உடல்நலக் குறைவால், நேற்று முன்தினம் காலை சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று (செப். 18) இரவு உயிரிழந்தார்.
கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர்.
இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார்.
தனுஷின் ‘மாரி’, விஜய்யின் ‘புலி’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் மனதை ஈர்த்திருந்தார்.
தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி ஆகியோர் நேரில் சென்று ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.
தற்போது அவரது உடலுக்கு நடிகர் ராதா ரவி அஞ்சலி செலுத்தியப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “எனது அன்பு சகோதரர் ரோபோ சங்கருக்கு உடல்நிலை சரியில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் இப்படி ஒரு செய்தி வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.

அவருக்கு சிறுவயதுதான். எல்லோரிடமும் அன்பாகத்தான் இருப்பார். ரொம்ப அன்பான ஒரு இதயம். ரோபோ சங்கருடன் நான் பணியாற்றியப்போது பார்த்திருக்கிறேன் நல்ல டைமிங் காமெடி பண்ணக்கூடியவர். இவருடைய இழப்பு சின்னத்திரைக்கு மட்டும் அல்ல பெரிய திரைக்கும் லாஸ்தான்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய எம்.எஸ்.பாஸ்கர் பேசியப்போது, “ரொம்ப வருத்தமான விஷயம் இது. ஒரு இனிமையானக் குணம் கொண்ட ஒரு தம்பி.
ஆரம்பகாலத்தில் இருந்து அவரது உடலைக்கட்டுக்கோப்பாக வைத்திருந்து ரோபோ மாதிரி நடித்ததையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன் ரசித்திருக்கிறேன். அவருடன் நல்லப் பழக்கம் எனக்கு இருக்கிறது. தங்கமானக் குணமுடையவர். நாங்கள் எல்லோரும் கோவா போயிருந்தோம்.

உடல்நலக் குறைவால் அப்போது மிகவும் மெலிந்துதான் இருந்தார். அவரது மனைவிதான் உடன் இருந்து பார்த்துக்கொண்டார்கள். இறந்ததற்கு பிறகு இதுதான் காரணம், அதுதான் காரணம் என்று சொல்வதில் எந்த ஒரு பயனும் இல்லை.
அவருக்கு இந்த பூமியில் வாழ்வதற்கு விதிக்கப்பட்ட காலம் அவ்வளவுதான். அவரின் இந்தப் பிறப்பு போதும் என்று இறைவன் முடிவு எடுத்திருக்கிறார். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…