
கஞ்சா மிட்டாய் கடத்தல்
நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது.
தேசிய அளவிலான வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்தச் சாலை குட்கா, கஞ்சா போன்ற சட்டவிரோதப் போதைப் பொருள்களின் முக்கிய வழித்தடமாக மாறி வருகிறது.
எல்லைகளில் மூன்று மாநிலங்களின் சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தாலும், சட்டவிரோத போதைப்பொருள்களின் கடத்தல் குறைந்தபாடில்லை.
கூடலூரில் இருந்து வழிக்கடவு சாலை மார்க்கமாக கேரளாவிற்கு கஞ்சா மிட்டாய் கடத்தல் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், கஞ்சா மிட்டாய்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பிரத்யேக வாகனத் தணிக்கையில் கேரளக் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லையில் காவல்துறையினர் சோதனை
இந்த நிலையில், கேரள எல்லையில் அமைந்துள்ள வழிக்கடவு சோதனைச் சாவடி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கருப்பு நிறத்தில், வழக்கத்திற்கு மாறான திண்பண்டங்கள். இருப்பதைக் கண்டு மேலும் சந்தேகமடைந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவை கஞ்சா மிட்டாய்கள் என்பதைக் கண்டறிந்தனர்.
உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இரண்டு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த கேரளக் காவல்துறையினர்,
“கஞ்சா கலக்கப்பட்ட மிட்டாய்களை பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல்கள் வருகின்றன.
தமிழகப் பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுவிலக்கு பிரிவு துணை இன்ஸ்பெக்டர் தலைமையில் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

கூடலூர் அதிகாரி, வயல் பகுதியைச் சேர்ந்த ஜிஷாத் மற்றும் முகமது காசிம் இருவரும் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் 125 கிராம் கஞ்சா மிட்டாய்கள் இருப்பதை கண்டறிந்தோம்.
வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களுடன் தொடர்பில் இருந்த கஞ்சா மிட்டாய் உற்பத்தி கும்பலை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.