
கோவை: தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் அவசியம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி ஜிஎஸ்டியை குறைத்து, பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். அதற்கு தமிழக அரசு நன்றி கூறவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தவெக தலைவர் விஜய் எங்கள் கட்சி குறித்து பேசுவதைவிட. திமுக மீதான எதிர்ப்பைக் காட்டுவதில் தீவிரமாக இருக்க வேண்டும்.
அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது, கர்ச்சீப்பால் முகத்தை துடைத்ததாக பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார். அதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. பாஜக எப்போதும் மக்களுக்கு நன்மை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். திமுக கூட்டணி மீது, அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. அதனால்தான் எதிர்க்கட்சி கூட்டணியை விமர்சிக்கிறார்கள்.