
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொது மக்களிடம் உள்ள செல்வாக்கு, 2026 சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்? என்பன குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், கட்சி நிர்வாகிகளை செப்.18 முதல் 21-ம் தேதி வரை மண்டல வாரியாகச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காலையில் சென்னை மண்டல நிர்வாகிகளும், மாலையில் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளும் பங்கேற்றனர். அவர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.