
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். தனது அபாரமான மிமிக்ரி திறமை மூலம் தொலைகாட்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இவரும் சுட்டி அரவிந்தும் சேர்ந்து செய்யும் நகைச்சுவைகள் அப்போது பிரபலமாகின. மேடைகளில் ரோபோ போல இவர் ஆடும் நடனத்தின் மூலம் இவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது.
தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் – அப் காமெடி, மிமிக்ரி செய்து வந்தவர் திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரா படத்தில்தான் முழுநீள கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது. பின்னர் தொடர்ந்து ’கப்பல்’, ‘மாரி’, ’வாயை மூடி பேசவும்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. விஷ்ணு விஷாலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இவரது நகைச்சுவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.