
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சில பகுதிகளில் இதற்கு முன் நடந்த 'வாக்குத் திருட்டு' குறித்தும் 'ஆதாரங்களை' வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது இந்த முயற்சி, பிஹார் தேர்தலில் தாக்கம் தருமா என்ற கேள்வி எழுகிறது.
'Vote chori' அதாவது 'வாக்கு திருட்டு' – கடந்த சில வாரங்களாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்தால், நாடு முழுவதும் அதிகம் பேசப்படும் சொல்லாடல் இது. இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை வலிமையாக எதிர்க்க வகுக்கப்பட்ட உத்தியின் எளிமையான வெளிப்பாடு இது. 'Vote chori' அல்லது 'வாக்கு திருட்டு' என்பது இரண்டே வார்த்தைதான். ஆனால், அதன் வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.