• September 18, 2025
  • NewsEditor
  • 0

“காதல்” பாலினத்தையும் கடந்தது

`காதல்’ என்ற இந்த உணர்வு சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்த ஒன்று என்பதை நம்மில் பலருக்கும் தெரியும். தற்போது இந்தக் காதல் பாலினத்தையும் கடந்ததாக நமக்கு நிரூபிக்கிறார் சரோ எனும் தனது திருநங்கை காதலியின் கரம் பிடித்த, சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சரவணகுமார்.

ஆரம்பத்தில் குடும்பமும், சுற்றத்தாரும் புரிந்துகொள்ளாமல் இருந்தபோதும், பொறுப்புடனும் உறுதியுடனும் வாழ்ந்து காட்டியதால் இன்று சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது.

காதல் என்பது பாலினம் கடந்த ஒரு உணர்வு என்பதை வெளிப்படுத்தும் இவர்களின் பயணம், மாற்றம் சாத்தியமென்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது.

சாதாரண ஆண்–பெண் காதலையே எதிர்க்க நினைக்கும் இந்த சமூகம், உங்களின் இந்தக் காதலை எப்படி பார்த்தது? உங்களின் காதல் துவங்கிய தருணம் எது என கேட்டபோது –

முகநூலில் துவங்கிய நட்பு:

ஆரம்பத்தில் பேஸ்புக்கில் எல்லாரையும் போல நண்பர்களாகத்தான் பழகிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு இடையிலிருந்த நட்புதான் எங்கள் இந்தக் காதல் திருமணத்திற்கு அடித்தளமாக அமைந்தது. நான் முதலில் அவங்களைப் பார்த்தபோது, அவங்க ஆண் தோற்றத்தில்தான் இருந்தாங்க.

சரவணகுமார் – சரோ

“முதலில் காதலிக்கிறேன்னு தைரியமாகச் சொன்னதும் அவங்கதான். நான் வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிச்சிருக்கேன்.

அந்த நேரத்தில் இவங்களோட அக்கறையும், உறுதுணையும் தான் என்னை ஊக்கப்படுத்திச்சு. அதனாலோ என்னமோ தெரியல, இவங்களோட காதலை என்னால மறுக்கத் தோணல.

இந்த சமூகம் என்னை எவ்வளவு எதிர்த்தாலும் பரவாயில்ல, நான் கடைசி வரைக்கும் இவங்களை கைவிடமாட்டேன்,” எனக் கூறி தனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினார் சரவணகுமார்.

“என்னை ஒருபோதும் விட்டுக்கொடுக்கல”

தங்களின் காதலுக்காக இந்த சமூகத்தையே எதிர்க்கும் தைரியம் கொண்டவரை கரம் பிடித்ததைப் பற்றி சரோ அவர்களிடம் கேட்டபோது,

“நான் ஆரம்பத்தில் காதலை சொன்னது உண்மைதான். ஆனால் அதை இவர் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவாருன்னு எனக்கு அப்போ தெரியல. ஏன்னா, இது சாதாரணமா வரும் ஒரு காதல் இல்லை. இந்தக் காதல்ல ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கு – அது சமூகத்துலயும் சரி, நம்ம குடும்பத்துலயும் சரி.

இது அத்தனையையும் தாண்டி, எனக்காக எப்பவுமே இருப்பாரா என ஆரம்பத்தில் நான் பயந்தேன். ஆனால் இத்தனை வருடங்களில், என்னை இவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை.

நம்ம ஊர்ல திருநங்கைகளோட நிறைய ஆண்கள் காதலிக்கிறாங்க. ஆனா அதைப் சமூகத்துக்கு முன்னாடி சொல்வதற்கும், தன்னோட குடும்பத்தில் சொல்வதற்கும் பயப்படுறாங்க. இன்னும் சிலர் தன்னோட தேவைகளுக்காக பயன்படுத்திட்டு, என்ன மாதிரி இருக்கிறவங்களை கைவிட்டுட்டு போயிடுறாங்க.

அதுமாதிரி இவரும் இருந்துருவாரோன்னு நான் நினைத்தேன். ஆனால் இவரு எப்போதும் சமூகத்தை விட எங்கக் காதலையே பெருசா நினைப்பாரு. இந்தக் காதலுக்காக எதையும் செய்ய அவர் துணிந்துவிட்டார்.

குடும்பம் எதிர்த்து, பின்னர் ஏற்றுக்கொண்டது

சமூகத்தின் பேச்சுக்களைப் பொருட்படுத்தாமல் இருப்பது சரிதான். ஆனால், உங்களின் குடும்பம் இதை எவ்வாறு அணுகியது? அவர்கள் இதை ஏற்றுக்கொண்டார்களா? என்ற என் கேள்விக்கு சரவணகுமார் பதிலளிக்கத் தொடங்கினார் –

“ஆரம்பத்தில் என்னோட வீட்டிலேயும் சரி, அவங்களோட வீட்டிலேயும் சரி, எங்கக் காதலை யாருமே புரிஞ்சுக்கல. எங்களோட காதலை தவறான ஒன்றா தான் பார்த்தாங்க.

இந்த விஷயத்துல அவங்களை குறை சொல்லவும் முடியாது. எந்த ஒரு பெற்றோரும் இருந்தாலும் இந்த விஷயத்துல எதிர்க்கத்தான் செய்வாங்க. படிச்சவங்க கூட இதை இன்னும் புரிஞ்சுக்கல.

எங்களுக்கு முன்னாடியே எங்களைப் பல பேர் கொச்சையான வார்த்தைகளால திட்டினதும் உண்டு. ஆனா அதையெல்லாம் நாங்க பெருசா பொருட்படுத்தல.

இது என்னோடக் காதல், இது என்னோட உணர்வு. உங்களுக்கு புரிஞ்சாலும் சரி, புரியாவிட்டாலும் சரி – இதை நான் யாருக்காகவும் மாத்திக்க போறதில்லைன்னு ஒரு முடிவோடத்தான் இருந்தேன்.

“ஒரு கட்டத்துல என் குடும்பம் இதை முழுசா மறுத்தப்போ, என் குடும்பத்தை விட்டு பிரிஞ்சு நானும் இவங்களும் பெங்களூர்ல தனியா வாழ்ந்துட்டு வந்தோம். அதுக்கு அப்புறம்தான் எங்க வீட்டை கொஞ்சம் கொஞ்சமா புரியவச்சு, இப்போ இந்தத் திருமணத்தை அவங்களோட சம்மதத்தோட நடத்தி இருக்கோம்,” என சரவணகுமார் அவர்கள் கூறி முடித்தார்.

சரோவின் அனுபவம்

தனது வீட்டில் நடந்ததைப் பற்றி கூறத் தொடங்கினார் திருமதி சரோ,

“எங்க வீட்டில என்னை ஆரம்பத்திலிருந்தே அவங்க புரிஞ்சுக்கல. என்னோட வீட்டுல நான் தான் ஒரே பையன். என்னோட அப்பா சின்ன வயசுல இருந்தே எங்க கூட இல்ல. அம்மா தனியா கஷ்டப்பட்டுத்தான் என்னையும் என் அக்காவையும் வளர்த்தாங்க.

என்னோட பத்து வயசிலிருந்தே எனக்குள்ள இந்த உணர்வு இருந்தத, என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. ஆனால் இதை யார்கிட்டயும் தைரியமா சொல்ல முடியல. என் அம்மாவால கூட இதைப் புரிஞ்சுக்க முடியல.

நான் இதை முதல் தடவையே என் அம்மாவிடம் சொல்லும்போது, அவங்க முழுசா உடைஞ்சுபோயிட்டாங்க. காரணம் – அவங்களுக்கு இதைப் பற்றின புரிதல் இல்ல.”

சரவணகுமார் – சரோ

“நான் இன்னொரு பெண்ணைத் திருமணம் செஞ்சுக்கிட்டா இது சரியாயிடும்னு என்கிட்ட பல தடவை சொல்லி அதற்காக முயற்சியும் எடுத்தாங்க. ஆனால், என்னால இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கேள்விக்குறியாக்க முடியாதுன்னு எங்க அம்மாவிடம் சொல்லிட்டேன்.

சரியான ஒரு கணவர் அமைஞ்சிருந்தா, எங்க அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டாங்க. இத்தனையையும் பார்த்துட்டு, நான் இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை எப்படி கஷ்டப்படுத்த முடியும்ன்னு என் அம்மாவிடமே கேட்டேன்.

அப்போ எங்க அம்மா என்னை புரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க. இப்போ எங்க ரெண்டு குடும்பமும் இதை முழுசா புரிஞ்சுக்கிட்டு, இந்தத் திருமணத்தில்கூட அவங்களோட ஆதரவு கொடுத்தாங்க.”

சக திருநங்கைகள் கூட எதிர்ப்பு

உங்களுடைய சக நண்பர்கள் இதை எப்படி பார்த்தாங்க? அவங்களோட ஆதரவு உங்களுக்கு கிடைச்சுதா? என்ற கேள்விக்கு திருமதி சரோ அவர்கள் கூறத் தொடங்கினார்:

யாருன்னே தெரியாத மனுஷங்க கூட இதைப் பற்றி புரிஞ்சுக்குவாங்க. ஆனா நம்ம கூடவே இருக்கிறவங்க தான் இதை முதல்ல தவறா நினைக்கிறாங்க. எங்களையும் அப்படித்தான் — எங்க கூடவே இருந்த நண்பர்கள், ஏன் சக திருநங்கைகள் கூட “இது சாத்தியமில்ல”ன்னு சொன்னாங்க.

திருநங்கைகள் அப்படி சொல்ல காரணம், அவங்களோட வாழ்க்கையில அவங்க இதே மாதிரி சந்திச்ச சில கஷ்டங்கள்தான். நான் ஆரம்பத்துல சொன்ன மாதிரி இங்க பலரும் திருநங்கைகளை காதலிக்கிறார்கள். ஆனா அதை சமூகத்துக்குக் கிட்ட சொல்லும்போது, சமூகம் ஏத்துக்காது என்பதால, எங்கள மாதிரி சிலரை பயன்படுத்துறதுக்குத்தான் நினைக்கிறாங்க.

அது மாதிரி இவரும் இருந்துருவாருன்னு திருநங்கைகள் “இதை வேணாம்”ன்னு சொன்னாங்க. ஆனால் எனக்கு இவர்மேல நம்பிக்கை இருந்துச்சு. அதை இவர் எப்பவுமே காப்பாத்திட்டாரு.

இப்போ கூட, எனக்கு பெண்ணா மாறுவதற்கான அறுவை சிகிச்சை, அதற்கான பணம், என்னைப் பார்த்துக்கிற வரைக்கும் — எல்லாத்தையும் இவரே தான் பார்த்துக்கிட்டாரு. ஒரு திருநங்கை ஒரு ஆணுக்காக மாறனும்னு நினைக்கும் போது, அந்த ஆண் அதுக்கு தகுதியானவனா என்று பாக்கணும். அப்படி பார்க்கும்போது, எனக்கு இவர் கிடைச்சது ஒரு பெரிய வரம் தான்.

சட்டப்படி திருமணம்

“இந்த திருமணத்தை சட்டப்படி நடத்தணும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு?” என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார் சரவணகுமார் அவர்கள்:

“இந்த திருமணம் சட்டப்படி தான் இருக்கணும்னு நாங்க இருவரும் ஆரம்பத்திலிருந்தே தெளிவா இருந்தோம். காரணம், சட்டம்தான் எங்களுக்கான உரிமையையும் எங்க உணர்வுகளையும் மதிக்கும்னு நாங்க நம்பினோம். ஆனா அதை சரிவர வழிநடத்த எங்களுக்கு சரியான ஆள் கிடைக்கல. எங்களுக்காக இருக்கிற சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்கூட இதுக்காக முன்வரல.”

சரவணகுமார் – சரோ

திருமண சான்றிதழுக்கான போராட்டம்

“என்னோட மனைவிக்கு ஆதார் கார்டில் பாலினம் மாற்றுவதற்கும், திருநங்கை அடையாள அட்டை எடுக்கிறதுக்கும் நிறைய சிரமங்களை சந்திச்சோம். எங்கள் திருமணத்துக்குத் தேவையான சான்றிதழ்களை வாங்குவதற்கே கிட்டத்தட்ட இரண்டு மாதத்துக்கு மேல அலைஞ்சு திரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு கட்டத்துல, ‘இது சரியாக முடியாது போல’ன்னு நெனச்சு, சாதாரணமா கோவிலுக்கு போய் திருமணம் செய்து கொள்ளலாம்னு முடிவு செய்தோம். ஆனா அங்க கூட, இத்தகைய திருமணங்கள் ஏற்கப்படாது என்று கோவிலே மறுத்துட்டாங்க.

அதுக்கப்புறம்தான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனிதநேயம் சட்ட உதவி மையம் மூலமாகவும், வழக்கறிஞர் சென்னியப்பன் அவர்களுடைய முன்னெடுப்பு மூலமாகவும் தான் எங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடிந்தது.” – எனக் கூறினார் சரவணகுமார்.

இன்னும் பல சவால்கள் – வழக்கறிஞர் சென்னியப்பன்

இப்படியான திருமணங்களை சட்டத்தால் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் பற்றி வழக்கறிஞர் திரு. சென்னியப்பன் அவர்களிடம் கேட்டபோது

இதுவரைக்கும் மூன்று திருநங்கை திருமணங்களை நாங்கள் எங்களுடைய மனிதநேயம் சட்ட உதவி மையத்தின் மூலமாக சட்டப்படி நடத்தி வைத்திருக்கிறோம். ஒவ்வொரு திருமணமும் சவாலான ஒன்றாகவே அமைந்திருக்கிறது. காரணம், இந்த மாதிரியான திருமணங்களை சட்டம் ஏற்றுக்கொண்டாலும், சக மனிதர்கள் இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது மாதிரியான திருமணங்கள் அவர்களுக்கே புதிதாக இருப்பதால், நாங்கள் பல சட்ட வழக்குகளை மேற்கோள் காட்டித்தான் இந்த திருமணங்களை நடத்தி வருகிறோம். இது மட்டும் இல்லாமல், பல சுயமரியாதை திருமணங்களையும் நாங்கள் நடத்தி வைத்திருக்கிறோம்.

சட்டத்தின் மூலம் சக மனிதர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ, அது எல்லாவற்றையும் செய்து வருகிறோம். இந்த மாதிரியான திருமணங்களை சாதாரண ஒன்றாகவும், சமதர்மத்தோடும் அனைவரும் அணுக வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம் என வழக்கறிஞர் சென்னியப்பன் தனது கருத்தை தெரிவித்தார்.

“எங்கள மாதிரி இருப்பவர்களுக்கு நாங்களே முன்னோடிகள்” – சரோ

சமூகம் நம்மை எதிர்க்கத்தான் செய்யும். காரணம், இது சமூகத்துக்கு புதிதான ஒன்று. ஆனால் அதே சமூகம் நம்மை ஏற்றுக்கொள்வதும் செய்யும்.

ஆரம்பத்தில் எங்கள் குடும்பமும் எங்களைப் புரிந்துகொள்ளவில்லை. எங்களைச் சுற்றி இருந்தவர்களும் எங்களைப் புரிந்துகொள்ளவில்லை. சாதாரணமாக வாடகைக்கு கூட வீடு கிடைக்கவில்லை. அத்தனையையும் தாண்டி நாங்கள் அவர்கள்முன் வாழ்ந்து காட்டினோம்.

இப்போது எங்கள் குடும்பமும் சரி, எங்களைச் சுற்றி இருப்பவர்களும் சரி – எங்களை ஏற்றுக்கொண்டு, சாதாரண தம்பதிகள் போல சமமாக நடத்துகிறார்கள். இது எல்லாமே நாங்கள் பொறுப்போடும், சமூகத்தில் ஒழுக்கம் தவறாமல் நடந்துகொள்வதால்தான் சாத்தியமாகியுள்ளது.

முடிந்தவரை எங்கள் மாதிரி இருப்பவர்களை, பெற்றோர் ஏற்றுக்கொண்டாலே போதும். அப்போதுதான் இது எல்லாமே சரியாகிவிடும்.

என்று கூறி, தங்களுடைய சமூகத்தால் இன்னும் முழுமையாக அறியப்படாத காதலையும், அனைவரும் உணர வேண்டிய உணர்வையும் பகிர்ந்து முடித்தனர்.

காதல் (representational image)

நம் சமூகம் காதல் என்ற ஒன்றில்தான் இன்றுவரை நிலைபெற்றுள்ளது. அந்தக் காதல், “இவருக்கு இவர் மேல்தான் வர வேண்டும்” என்ற கட்டாயம் ஒன்றுமில்லை.

ஆண்–பெண் காதலிலேயே சாதி என்ற ஒன்றைக் கடக்க இன்னும் முயற்சித்து கொண்டிருக்கிற இந்த சமூகம், இதுபோன்ற பாலினம் கடந்த காதல்களை ஏற்கும் போது சிக்கல் உணர்வது இயல்பே.

இதுபோன்ற திருநங்கை தம்பதிகளுக்கு ஆதரவு தெரிவித்தால்கூட, “நீங்களும் அவர்களில் ஒருவரா?” என ஒரு வட்டத்துக்குள் வைத்துப் பார்க்கும் மனநிலை நம்மிடம் இன்னும் நீங்கவில்லை.

ஆனால், மாற்றம் வரும். மனநிலை மாறும். சமூகம் பழகும்.
அந்த நம்பிக்கையோடு நாமும் இவர்களை ஆதரிப்போம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *