
ஆண்டிபட்டி: திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பலன்பெற உள்ளன.
வைகை அணையில் இருந்து பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசன பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப்பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் என்று மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பலன்பெற்று வருகின்றன. இப்பகுதி பாசனத்துக்க நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து தண்ணீரை திறந்து வைத்தார். தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் ரஞ்ஜீத்சிங், கேஜே.பிரவீன்குமார், செ.சரவணன், தேனி எம்பி.தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.