
எடப்பாடி பழனிசாமி மீது ரகுபதி விமர்சனம்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் பாதி வழியில் கழற்றி விடுபவர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு டெல்லியில் அவர் நடந்துகொண்ட விதம். அவரை நம்பி வந்தவர்களை பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றது உதாரணமாக அமைந்துள்ளது.
அவர் யாருக்கும் விசுவாசி இல்லை என்பதை தமிழ்நாடு நன்றாக அறிந்துள்ளது. இன்று பா.ஜ.க தான் நான்காண்டு கால ஆட்சியை காப்பாற்றியது என்று கூறுகிறார்.
அப்படி, 4 ஆண்டு காலம் அ.தி.மு.க ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க-வை நாடாளுமன்றத் தேர்தலில் கழற்றிவிட்டு வேடிக்கை பார்த்தவர்.
தனக்கு முதலமைச்சர் பதவி தந்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி வேடிக்கை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. தன்னை நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் செய்வது ஒன்றுதான் அவருக்குக் கைவந்த கலை. இனி, அ.தி.மு.க தொண்டர்கள் ஏமாறாமல் விழித்துக்கொண்டால் சரி.
யாரையும் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார். எடப்பாடி பழனிசாமி கூறுவது, ‘எனக்கு ஆட்சி முக்கியமல்ல. பதவிதான் முக்கியம். அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருப்பதுதான் முக்கியம்’ என்று சொல்லக்கூடியவர்.
அவரால் அ.தி.மு.க கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர முடியாது. இன்று முகத்தை மறைத்துக்கொண்டு பலர் திரிகின்றனர்.
அதில், எடப்பாடி பழனிசாமி அரசியல்வாதிகளில் தனது முகத்தைக்கூட காட்ட முடியாமல் தனது முகத்தை கைக்குட்டையால் மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும்போது உள்ளே என்ன நடந்தது என்று சொல்ல முடியாது. முகத்தை மூடிக்கொண்டு வந்தாலே வெட்கப்பட்டும் அசிங்கப்பட்டும் வருவதாக அர்த்தம் அல்லது ஒரு தவறை செய்வதற்கு வருவதாக அர்த்தம்.
அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அடகு வைத்துவிட்டார். இதனை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தவெக விஜய்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் எந்தக் கட்டுப்பாட்டையும் அவர்கள் கடைப்பிடிக்காமல் தான் அவர்கள் செல்கின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறையில் உலா வந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலா முடித்துவிட்டு வந்துவிடுகின்றனர்.
இதைத்தவிர, வேறு எந்தச் சாதனையும் கிடையாது. மக்கள் நிச்சயமாக அவர்கள் பக்கம் செல்ல மாட்டார்கள். வாக்களிக்க மாட்டார்கள்.
மக்களுக்குத் தெரியும், யார் வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்பது தெரியும். நல்லாட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் தமிழ்நாடு மக்கள்.
விமான நிலைய பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலையத்திற்கு வெளியே நாங்கள் பாதுகாப்பு கொடுக்கலாம். விமான நிலையத்திற்குள் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் பழக்கம் அவர்களிடம் இல்லாததால் தான் பொதுச் சொத்துக்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன.
ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் தான் இந்த வினை நடந்துள்ளது. அரசு கட்டுப்படுத்தப் போனால் எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துவார்கள்.
அவருக்கு பெரிய கூட்டம் கூடியது நாங்கள் தடுத்துவிட்டதாகச் சொல்வார்கள். இதைவிட பல மடங்கு கூட்டத்தை எல்லாம் அமைதியாகச் சந்தித்துச் சென்றவர்கள் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்.

வடிவேலுவுக்கு, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா?
வடிவேலுவுக்கு, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? சிவாஜி தேர்தலில் தோல்வியடைந்தார். அதேபோல், நடிகர்களுக்குக் கூட்டம் கூடத்தான் செய்யும். அது, இயற்கை.
கடைகளைத் திறக்க வரும் சாதாரண நடிகரைக் கூடப் பார்ப்பதற்கு கடைவீதிகளில் அதிக மக்கள் கூடுவார்கள். அது, சினிமா மோகத்தால் வருவதே தவிர, அரசியல் மோகத்தால் அல்ல.
சமத்துவமே தி.மு.க தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையைக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் தி.மு.க. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
சமத்துவ ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் 2026 -ல் சமத்துவ ஆட்சியாக உள்ள தி.மு.க தான் வரும் என்று ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி” என்றார்.