• September 18, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து மார்ச் 12-ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

13 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மாநில அந்தஸ்து தீர்மானத்துடன் மார்ச் 27-ம் தேதி கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்பது விதி.

காவலர்களால் வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா

அதனடிப்படையில் 15-வது சட்டப்பேரவை 6-வது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி இன்று காலை 9.38 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் வாசித்து சபாநாயகர் செல்வம் அவையைத் தொடங்கியதும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜி.எஸ்.டி திருத்தம் மற்றும் புதுச்சேரியில் எளிய முறையில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி குறித்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அத்துடன், `அமைச்சரவை அனுப்பும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காரணமின்றி தாமதப்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும்’ என்ற மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

`அரசு உயரதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பதில்லை. கோப்புகளை காரணமின்றி திருப்பி அனுப்புவதால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை’ என்று முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாகவே அரசு நிகழ்ச்சிகளில் பேசி வரும் நிலையில், இந்த மசோதா மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

புதுச்சேரி பட்ஜெட்
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்

அதையடுத்து, `சட்டசபையில் அறிவிக்கப்பட்ட எந்த ஒரு திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. நகரப் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

அதனால் மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேச, சட்டசபையை குறைந்தது 5 நாட்களாவது நடத்த வேண்டும்’ என சபாநாயகரிடம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வாக்குவாதம் செய்தனர்.

அதையடுத்து அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டதால், எதிர்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபை காவலர்களால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார் சபாநாயகர் செல்வம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *