
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது முகத்தை துடைத்ததை, மூடிக்கொண்டு சென்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த சுற்றுப் பயணத்தின்போது கிடைத்த வரவேற்பு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதை உணர்த்தி இருக்கிறது. திமுக ஆட்சி அகற்றப்பட்டு அதிமுக ஆட்சி 2026-ல் அமையும்.