• September 18, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan:  நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன். அவர்களது தோற்றமே நீரிழிவு வந்ததைக் காட்டிக் கொடுக்கிறதே, அது ஏன். நீரிழிவு வந்தால் ஆரோக்கியமான தோற்றம் சாத்தியமில்லையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

நீரிழிவு என்பது உடலியக்கம் சார்ந்த (Metabolism)  ஒரு குறைபாடு.  டைப் 1 மற்றும் டைப் 2 என நீரிழிவில் இரண்டு வகை உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி உடல் எடை குறைவது இருக்கும்.

இவர்களது உடலில் இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் அல்லது அந்தச் சுரப்பு அறவே இருக்காது. உடலிலுள்ள செல்கள், திசுக்கள் சரியாக இயங்க வேண்டும் என்றால், அவை குளுக்கோஸை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குளுக்கோஸானது செல்களுக்குள் நுழைவதற்கான வாயில்தான் இன்சுலின். இது சுரக்கவே இல்லை என்றாலோ, குறைவாகச் சுரந்தாலோ, குளுக்கோஸ் உள்ளே போகாது.

அதன் விளைவாக செல்களுக்கு தேவையான எனர்ஜி கிடைக்காது. வெளியில் இருந்து வரும் உணவிலிருந்து எனர்ஜி கிடைக்காதபட்சத்தில், உடலில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு மற்றும் தசை அடர்த்தியையும் எனர்ஜிக்காக உண்ண ஆரம்பிக்கும். 

அதுபோன்ற நிலையில்தான் டைப் 1 நீரிழிவாளர்கள், உடல் மெலிந்து காட்சியளிப்பார்கள்.

நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன்?

டைப் 2 நீரிழிவில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் (insulin resistance) என்ற நிலை வரும். அதாவது இதை இன்சுலின் எதிர்நிலை என சொல்லலாம்.

முதலில் உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அது இல்லாத நிலையாக மாறும். இந்த வகை நீரிழிவிலும், முதலில் சொன்னதுதான் நடக்கும்.

அதாவது செல்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் தசைகளை உடல் ஆற்றலாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும். 

நீரிழிவாளர்கள் உடல் மெலிந்து காணப்பட, நீர்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

ரத்தச் சர்க்கரை அதிகமாக இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். அதனால் உடலில் நீரிழப்பு ஏற்படும்.

சருமம் வறண்டு, சுருங்கிப் போவதாலும் மெலிந்து காணப்படுவார்கள். ரத்தச் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருப்பது, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது, நல்ல கொழுப்பு, நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம் போன்றவற்றைப் பின்பற்றும்போது ஆரோக்கியான தோற்றத்துடன் இருக்கலாம்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *