
காலையில் அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே கண் விழித்து அலாரமை ஆஃப் செய்திருப்போம். இந்த அனுபவம், நம் வாழ்வில் பலமுறை நடந்திருக்கும். இது ஏதோ தற்செயலான நிகழ்வு என்றோ, அல்லது நமக்கு ஏதோ சூப்பர் பவர் இருக்கிறது என்றோ நினைத்திருப்போம். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.
சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm)
நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸின் ஒரு பகுதியான ‘சூப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ்’ (Suprachiasmatic Nucleus – SCN) தான் இவ்வாறு செயல்படத் தூண்டுகிறது. இது எப்போது தூங்க வேண்டும், எப்போது எழ வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.
நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தால், அதற்கேற்ப உடலின் இயக்கமும் செயல்படுகிறது. இதன் விளைவாக, அலாரம் அடிப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பே, உங்கள் உடல் விழித்தெழுவதற்கான செயல்முறைகளைத் தொடங்கிவிடும்.
கார்டிசோல் மற்றும் மெலடோனின் என்ற ஹார்மோன்கள் உறக்கத்தையும், விழிப்பையும் தீர்மானிக்கிறது. இந்த இரண்டு முக்கிய ஹார்மோன்கள் காரணமாக அமைகின்றன.
மெலடோனின் (Melatonin)
இது ‘தூக்க ஹார்மோன்’ என்று அழைக்கப்படுகிறது. இருள் சூழ்ந்ததும், நமது உடலில் மெலடோனின் அளவு அதிகரித்து, நமக்குத் தூக்கத்தை வரவழைக்கிறது. காலை நெருங்கும்போது, இதன் அளவு படிப்படியாகக் குறையுமாம்.
கார்டிசோல் (Cortisol)
இது ‘விழிப்பு ஹார்மோன்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் வழக்கமாக எழும் நேரத்திற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, கார்டிசோலின் அளவு அதிகரிக்கத் தொடங்குமாம். அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு நாம் கண் விழிப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

மன அழுத்தமும் ஒரு காரணமா?
சில சமயங்களில், மன அழுத்தமும் நாம் முன்கூட்டியே கண் விழிக்க ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு முக்கியமான மீட்டிங்கிற்காகவோ அல்லது ஒரு விமானத்தைப் பிடிப்பதற்காகவோ சீக்கிரம் எழ வேண்டும் என்று நினைத்தால், ஒருவிதமான பதட்டம் ஏற்படும்.
இந்த மன அழுத்தம், கார்டிசோல் மற்றும் ACTH போன்ற மன அழுத்த ஹார்மோன்களை வெளியிட்டு, உங்களை அலாரம் அடிப்பதற்கு முன்பே எழுப்பிவிடுமாம். நீங்களும் இதுபோன்ற அனுபவங்களைச் சந்திருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்!