
கரூரில் தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது (செப்டம்பர் 17).
இந்த விழாவில், பெரியார் விருது கனிமொழிக்கும், அண்ணா விருது சுப. சீத்தாராமனுக்கும், கலைஞர் விருது சோ.மா. ராமச்சந்திரனுக்கும், பாவேந்தர் விருது குளித்தலை சிவராமனுக்கும், பேராசிரியர் விருது மருதூர் ராமலிங்கத்துக்கும், ஸ்டாலின் விருது பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கும் வழங்கப்பட்டன.
மேலும், முரசொலி அறக்கட்டளை சார்பில் முதல்முறையாக முரசொலி செல்வம் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “கொட்டுகின்ற மழையில் அண்ணாவால் இதே நாளில் தொடங்கிவைக்கப்பட்ட இந்தக் கழகம், 75 ஆண்டுகள் மட்டுமல்ல நூற்றாண்டைக் காணும்.
இந்த ஆண்டு முப்பெரும் விழாவைக் கரூரில் நடத்த அனுமதி கேட்டு சகோதரர் செந்தில் பாலாஜி என்னிடம் வந்தார். நானும் ஒப்புதல் அளித்தேன்.
பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டையே இங்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

நாம் கோடு போடச் சொன்னால் ரோடு போடுவார். மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருப்பவர் செந்தில் பாலாஜி.
அதனால்தான் அவர் வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாகத் தூங்க முடியாது என்று அவரை முடக்கப் பார்த்தார்கள். ஆனால், அவரை முடக்க முடியுமா…
தொடர்ந்து ஆட்சியமைத்தோம் என்ற வரலாற்றைப் படைக்க வேண்டும்!
2019 முதல் நாம் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் நாம் வெற்றிபெற்று வந்திருக்கிறோம்.
இந்த வெற்றிப்பயணம் 2026-லும் தொடரும். தி.மு.க ஆட்சி தொடர்ந்து அமைந்தது என்ற புது வரலாற்றை நாம் படைக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவிக் கொள்கை. அந்தக் கொள்கையின் அரசியல் முகம் பா.ஜ.க.
இரண்டு நாள்களுக்கு முன்புகூட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றியதே பா.ஜ.க-தான் என்று உண்மையைப் பேசியிருக்கிறார்.
அந்தக் கைப்பாவை அரசை மக்கள் தூக்கியெறிய தி.மு.க-தான் காரணம் என பா.ஜ.க நம் மீது வன்மத்தோடு இருக்கிறது. பயந்துவிடுவோமா நாம… 75 ஆண்டுக்கால வரலாறு நமக்கு இருக்கிறது.

திமுக-வுக்கு மாற்று என்றவர்களெல்லாம் மறைந்து போனார்கள்!
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளுமே தி.மு.க-வை அழிப்போம் என்று கூறின. இப்போதும் சில பேர் தி.மு.க-வுக்கு நாங்கள்தான் மாற்று என்று பேசிக் கொள்கிறார்கள்.
மாற்று என்று சொன்னவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள். தி.மு.க மட்டும் மாறவில்லை. இதுதான் தமிழ்நாட்டு அரசியல்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது எதுவும் செய்யாமல், தமிழ்நாட்டை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற தெம்பு, திராணி இல்லாமல் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார்.
பா.ஜ.க தன்னோடு இருக்கிறது என்று இப்போதும் வாய் துடுக்கோடுப் பேசிக் கொண்டிருக்கிறார்.
அமித் ஷாவே சரணம் என்று சரண்டர் ஆகிவிட்டார்!
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசிக் கொண்டிருக்கிறார்.
ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க-வை அடகு வைத்துவிட்டார்.
திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது எனக் கூறியவர் அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
அ.தி.மு.க தொடங்கியபோது தனது கொள்கை அண்ணாயிசம் என்று சொன்னார்கள். அதை பழனிசாமி அடிமையிசம் என்று மாற்றி அமித் ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார்.

காலில் விழுந்த பிறகு முகத்தை மறைக்க கர்சிஃப்!
நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியைப் பார்த்து, `காலில் விழுந்த பிறகு முகத்தை மறைக்க கர்சிஃப்’ எதற்கு என்று எல்லோரும் கேட்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு இங்கு என்றுமே நோ என்ட்ரி.
பா.ஜ.க-வைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால் அடுத்து மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கித்தான் அவர்கள் நகர்வார்கள். ஏற்கெனவே காஷ்மீரில் முன்னோட்டம் பார்த்து விட்டார்கள்.
எப்படி இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்று உருவானபோது, தமிழ்நாடு மொழிப் போர் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றியதோ, அதேபோல இப்போது ஒரு உரிமைப் போர் நடத்தி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது.
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று கூறி உரையை முடித்தார்.