
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சடாச்சன் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குள் மூன்று பேர் திடீரென நுழைந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இருந்தனர். அவர்களது கையில் ஆயுதங்கள் இருந்தன. முகமூடி அணிந்து வந்த அவர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த வாடிக்கையாளர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களின் கை மற்றும் கால்களை கட்டி கழிவறையில் போட்டு அடைத்தனர். பின்னர் வங்கி மேலாளரிடம் பணம் இருக்கும் லாக்கர் அறையை திறக்கும்படி சொன்னார்கள். அதில் இருந்த ரூ. 1 கோடியை எடுத்துக்கொண்டார்கள். பின்னர் அங்கிருந்த லாக்கரை திறக்கச் சொல்லி தங்க நகைகளையும் கொள்ளையடித்தனர்.
தங்கம் மற்றும் நகைகள் இருந்த லாக்கரை திறக்கவில்லையெனில் சுட்டுக்கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் வேறு வழியில்லாமல் ஊழியர்கள் லாக்கரை திறந்தனர்.
கொள்ளையர்கள் பணம் மற்றும் தங்கம் இருந்த பைகளுடன் வெளியில் நிறுத்தி இருந்த வேனில் தப்பிச்சென்றனர். இது குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கொள்ளையர்கள் தப்பிச்சென்ற வேன் நம்பர் பிளேட் போலியானது என்று தெரிய வந்தது.
அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூர் நோக்கி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் சோலாப்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்தவுடன் இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதிக்கொண்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். வங்கியில் வாடிக்கையாளர்களின் 425 தங்க பாக்கெட்கள் இருந்தது. அதில் 398 பாக்கெட்களை எடுத்துச்சென்றுவிட்டனர். அவை மொத்தம் 20 கிலோ என்று தெரிய வந்துள்ளது.
அவற்றின் மதிப்பு ரூ.20 கோடியாகும். கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தங்க நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. கடந்த மே மாதம் இதே விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கனரா வங்கியில் 59 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.