
காசாவில் இஸ்ரேல் ராணுவம் குழந்தைகளைக் கொலை செய்வது தவறுதலான நிகழ்வு அல்ல, திட்டமிடப்பட்ட தாக்குதல் என வெளிநாட்டு மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிபுணர்கள் சொல்வதென்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்க அவசர சிகிச்சை மருத்துவர் மிமி 18 குழந்தைகள் நெஞ்சிலும், தலையிலும் குண்டு துளைத்து உயிரிழந்திருப்பதைக் கண்டறிந்துள்ளதாக வோல்க்ஸ்க்ராண்ட் தளத்தில் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா ட்ராமா சர்ஜன் பெரோஸ் சித்வா, முதலில் இது அனைத்தும் தன்னிச்சையானதாக இருந்திருக்கலாம் என நினைத்ததாகவும், ஒரே மருத்துவமனையில் பல சிறுவர்கள் தலையில் சுடப்பட்டுள்ளதை அறிந்ததும், இது ஒரு குழந்தைகள் படுகொலை என்பதை உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார்.
“இது குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு. யாரோ ஒருவர் குழந்தைகளுக்கு எதிராக ட்ரிகரை அழுத்தியிருக்கின்றனர்” என்றுள்ளார்.
இறந்த குழந்தைகளின் எக்ஸ்-ரேக்களை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள் இறப்புக்கான காரணம் குண்டுவெடிப்பாக இருக்க வாய்ப்பில்லை என்றும், ட்ரோன் தாக்குதல் அல்லது துப்பாக்கிச் சூடுதான் காரணம் என்றும் கூறியதாக வோல்க்ஸ்க்ராண்ட் தெரிவிக்கிறது.
முன்னாள் டச்சு ராணுவத் தளபதி மார்ட் டி குருயிஃப், தலையிலும் மார்பிலும் குண்டு துளைக்கப்பட்டு குழந்தைகள் இறப்பதை விபத்து எனக் கூறுவது நம்ப முடியாததாக உள்ளது எனக் கூறியிருக்கிறார்.
2023 முதல் தொடரும் குழந்தைகள் கொலை

இஸ்ரேல் வேண்டுமென்றே குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக விசாரணையில் கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இஸ்ரேலியப் படைகளால் காசாவில் 160க்கும் மேற்பட்ட குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிபிசி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதில் 95 வழக்குகளில், குழந்தைகள் தலையிலோ அல்லது மார்பிலோ சுடப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர். கொல்லப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் 12 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2023 அக்டோபரில் போர் தொடங்கப்பட்டது முதல் கடந்த ஜூலை வரை இந்தச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
20,000 குழந்தைகள் மரணம்
இஸ்ரேல் ராணுவத்தால் குழந்தைகள் கொல்லப்படுவது மட்டுமல்லாமல், கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என்கிறது பாலஸ்தீனிய மனித உரிமைகள் மையம் (PCHR).
இந்த அறிக்கைகளை மறுத்து, வேண்டுமென்றே குழந்தைகளைக் குறிவைக்கவில்லை எனக் கூறிவருகிறது இஸ்ரேல் ராணுவம்.
காசாவின் சுகாதார அமைச்சகத்தின்படி, அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 20,000 குழந்தைகள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக காசாவில் தினமும் சராசரியாக 28 குழந்தைகள் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் சுமார் 21,000 குழந்தைகள் ஊனமுற்றவர்களாக விடப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் குடும்பங்களை இழந்து தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.