
மகாராஷ்டிராவில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட தொடர் மாற்றம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குத் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற காரணங்களால் இத்தேர்தலை நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காமலிருந்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இம்மனு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது 4 வாரத்திற்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நான்கு மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.
ஆனால் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் இது வரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. உச்சநீதிமன்றத்தின் கெடு இந்த மாதத்தோடு முடிவடையும் நிலையில் இவ்வழக்கு மீண்டும் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில் குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தல் நடத்தப்படாதது குறித்து மாநில தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், தேர்தலை நடத்த ஒரு சலுகை வழங்குவதாகவும், வரும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேற்கொண்டு காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை நடத்துவதில், ஏதாவது உதவி தேவைப்பட்டால் அக்டோபர் 31ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும், அதன் பிறகு காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், “தேர்தலை நடத்த எவ்வளவு ஊழியர்கள் தேவை என்பது குறித்து இரண்டு வாரத்திற்குள் மாநில தேர்தல் ஆணையம் மாநிலத் தலைமைச் செயலாளருக்கு அறிக்கை கொடுக்கவேண்டும். மாநிலத் தலைமைச் செயலாளர் மற்ற துறை செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்துத் தேவைப்படும் ஊழியர்களை 4 வாரத்திற்குள் கொடுக்கவேண்டும்.

தேர்தலை நடத்த தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இது தொடர்பாக வரும் நவம்பர் 4ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு கிளைகளில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் ஒரே கிளையின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.