
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘தண்டகாரண்யம்’.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷனில் தயாரான இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று முன்தினம் (செப்.15) திரையிடப்பட்டிருக்கிறது.
படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
படம் குறித்துப் பேசிய திருமாவளவன், “அதியன் ஆதிரை ஒரு வரலாற்று நிகழ்வைக் கருப்பொருளாகக்கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்.
தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர் முதல் படத்திற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்னையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் நமக்குப் பல செய்திகளைச் சொல்கிறது.
பழங்குடி மக்களின் வாழ்வியல் எவ்வளவு துன்பம், துயரம் நிறைந்ததாக இருக்கிறது என்று பேசப்படுகிறது.
வனத்துறையினரால் பழங்குடியின மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது.
நெஞ்சைத் தொடுகிற காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார். இதன் வசனம் நெஞ்சை ஈர்க்கிறது.
படத்தின் கதாநாயகன் கலையரசன், முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அதிகாரம் எப்படி இவர்களை ஆட்டிப்படைக்கிறது. போலியாக ஒரு திட்டம், பயிற்சி வகுப்புகள், என்கவுண்டர் செய்வதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
நக்சல்கள் பக்கம்தான் மக்கள் நிற்கிறார்கள். நக்சல்கள் மக்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் பக்கம் அவர்கள் ஒருபோதும் நிற்க மாட்டார்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
நக்சல்களை எந்தச் சக்தியாலும் பிரிக்கமுடியாது. ஏனென்றால் அவர்கள் மக்களுக்கான போராளிகள், பாதுகாவலர்கள் என்பதை இப்படம் அழகாக எடுத்துக்காட்டுகிறது.
அதியன் ஆதிரை முற்போக்காகச் சிந்திக்கிறார். சமுகத்தின் நலனுக்காகச் சிந்திக்கிறார் என்பதை இந்தப் படம் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவருக்கு என்னுடைய பாராட்டுகளும். வாழ்த்துகளும்” என்று பாராட்டி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…