
2023-ம் ஆண்டு காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் கொலை இந்தியா – கனடா உறவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசலை உண்டாக்கியது, பெரிதாக்கியது.
அவரது கொலைக்கு இந்தியாவே காரணம் என்று கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்ட, இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமானது.
அதன் பிறகு, கனடா பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டப் பின், இப்போதுதான், இந்தியா, கனடா உறவு மீண்டும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்த நிலையில், ‘Sikhs for Justice (SFJ)’ என்கிற அமெரிக்காவைச் சேர்ந்த காலிஸ்தான் அமைப்பினர் நாளை கனடா வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.
அறிக்கை
இந்தக் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்கி 12 மணிநேரம் இந்திய தூதரகத்தை முற்றுகையிட உள்ளோம்.
இது இந்திய அரசு தலைமையிலான உளவு மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை ஆகும். நாளை இந்திய தூதரகத்திற்கு வர திட்டமிட்டிருந்தவர்கள் இன்னொரு நாளுக்கு அதை திட்டமிடவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போஸ்டர்
மேலும், கனடாவின் இந்திய உயர் ஆணையர் தினேஷ் பட்நாயக்கின் முகம் கொண்ட போஸ்டரை வெளியிட்டு, ‘கனடாவில் இந்திய இந்துத்துவாவின் புதிய முகம்’ என்றும் கூறப்பட்டுள்ளது.